புதுச்சேரி : கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக முன் விரோதத்தில் 'டீ' வியாபாரியை வழி மறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை.


'டீ' வியாபாரியை வழி மறித்து அரிவாளால் வெட்டி கொலை


புதுச்சேரி மேட்டுப்பாளையம் சாணரப்பேட்டையை சேர்ந்தவர் பாபு (வயது 43), இவர் தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில், 'டீ' வினியோகித்து வருகிறார். இவர் மேட்டுப்பாளையம் தொழிற்சாலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பின் தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், திடீரென பாபுவை வழி மறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. தலையில் வெட்டுப்பட்ட பாபு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். தகவலறிந்த சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, எஸ்.பி. வீரவல்லவன், ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். பாபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர்.


கொலை முயற்சி வழக்குகள்


இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பாபு மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவருக்கும், ரவுடி ரங்கராஜன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. பாபு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், மேட்டுப்பாளையம் பகுதியில் அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதம்


இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் சமாதானத்தை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பாபுவிற்கும், அதே பகுதியை சேர்ந்த நிரஞ்சன், (வயது  27), என்பவருக்கும் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று டீ கொடுக்க சென்ற பாபுவை, நிரஞ்சன், 27; தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கத்தியால் வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது.


போலீசார் விசாரணை


நிரஞ்சனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர் அளித்த தகவலின் பேரில், அவரது கூட்டாளிகள் ரங்கராஜன் (24),  பிரதீஷ் (31), வினித் (26) சரவணன் (210 ஆகியோரை நள்ளிரவில் மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.