புதுச்சேரி: தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.5.10 கோடி மோசடி செய்த வழக்கில், மேலும் ஒருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.5.10 கோடி மோசடி
புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவன மேலாளர் சுகியா என்பவருக்கு கடந்த மார்ச் 25ம் தேதி, அவரது நிறுவன உரிமையாளர் போல மர்ம நபர் வாட்ஸ் ஆப் மூலம் குறுச்செய்தி அனுப்பி, குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ.5.10 கோடி செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர். அதை உண்மை என நம்பிய சுகியா அந்த வங்கி கணக்கிற்கு 5 தவணைகளாக ரூ.5.10 கோடியை அனுப்பியுள்ளார்.
அதன் பிறகு உரிமையாளரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, மர்ம நபர் மோசடியாக பணத்தை அனுப்பக்கூறியது தெரியவந்தது. இதுகுறித்து சுகியா அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர்கள் கீர்த்தி, தியாகராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோசடி நபர்களை தேடினர்.
மோசடியில் சிக்கிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள்
அதில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொபிகுல் ஆலம் முலா, (35) நசிபுல் இஸ்லாம் (34) கேரள மாநிலம் வட்டப்பாறை அஜித், (30) மலப்புரம் சஷீல் சகத், (23) நபீ, (18), சஜித் (33) கர்நாடகாவை சேர்ந்த ஓம்கார் நாத், (42) தெலுங்கானா ராகவேந்திரா, (44) ஆந்திராவை சேர்ந்த சசிதர் நாயக், (26) பவாஜன், (36) கோயம்புத்துார் ரவிகிருஷ்ண ராவ், (50) திருச்சி குமரேசன், (26) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கோடியே 48 லட்சம் ரூபாயை போலீசார் மீட்டனர்.
இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய கேரளா, மலப்புரத்தை சேர்ந்த சீனு 45; என்பவரை சைபர் கிரைம் தனிப்படையினர் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் சில வெளிநாட்டு நபர்களின் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதால், அந்த நபர்களையும் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளார்.
விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.
அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.
வங்கி OTP எண் சொல்லாதீங்க
மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.