புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள், குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்தனர். முன்னதாக புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் இருந்த 6 ஆயிரம் அறைகளும் நிரம்பிவிட்டது. இதனால் அறைகள் கிடைக்காமல் சுற்றுலா வந்தவர்கள் திண்டாடினர்.
60 பவுன் நகைகள், 10க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் திருட்டு
31ம் தேதி இரவு விடுதிகளில் தங்க இடம் கிடைக்காதவர்கள் ரயில் நிலையம், பஸ் நிலையம், பார்க்கிங் இடங்கள், பிளாட்பார்ம், தங்கள் வந்த கார்களில் படுத்துறங்கினர். பலர் சாலையோரம் கடும் குளிரிலும் தூங்கியதை காணமுடிந்தது. மது அருந்திவிட்டு தன்னிலை மறந்து மட்டையாகி கிடந்த பலரிடம் செயின், விலை உயர்ந்த போன், கைக்கடிகாரம், பர்ஸ் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். போதை தெளிந்ததும், பொருட்களை பறிகொடுத்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நகரப்பகுதியில் உள்ள 2 காவல்நிலையங்களில் பல புகார்கள் பதிவாகி வருகிறது. இதுவரை 60 பவுன் நகைகள், 10க்கும் மேற்பட்ட மேற்பட்ட ஸ்மார்ட்போன்களை திருடியதாக புகார் அளித்துள்ளனர். போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது சிலர் திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதை வைத்து 10 பவுன் நகைகள்,ஸ்மார்ட் போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.
புத்தாண்டு டூவீலர் விபத்தில் 43 பேர் படுகாயம்
புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு, பொதுமக்கள் புதுவை கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் கூடி, கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். புதுச்சேரி முத்திரையர்பாளையம் பகுதியை சேர்ந்த அருள்பாண்டியன் (33), புத்தாண்டு கொண்டாடிவிட்டு போதையில் டூவீலரில் சென்றபோது, கோரிமேடு விநாயகர் கோயில் தெருவில் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தார். இதேபோல் அரியூரை சேர்ந்த தேவராஜ் (21) போதையில் கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சிலை அருகே டூவீலரிலிருந்து விழுந்து உயிரிழந்தார். மேலும் விபத்தில் சிக்கி 43 பேர் படுகாயம் அடைந்தனர்.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சுமார் ரூ.30 கோடிக்கும் மேல் மது விற்பனை
கிறிஸ்துமஸ் விடுமுறை முதல் நாள் தோறும் மது வகைகளின் விற்பனை படிப்படியாக அதிகரித்து வந்தது. இதில் புத்தாண்டு நள்ளிரவில் மது விற்பனை இருமடங்காக உயர்ந்தது. மது விற்பனை நிலையங்கள், மதுபார்கள், ரெஸ்டோ பார்கள், ரிசார்ட்டுகளில் மது விற்பனை இரு மடங்கு அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தனியார் மதுபார்கள் அதிகம் என்பதால் மது விற்பனையை துல்லியமாக கணிக்க முடியாது. ஆனால் தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனையை கணக்கிட முடியும். ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளில் அளவற்ற மது வழங்கப்பட்டு இருப்பதால் அதனை கணக்கிட முடியாது. புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சுமார் ரூ.30 கோடிக்கும் மேல் மது விற்பனை நடந்து இருப்பதாக மது விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டுமே ஒரு மாதத்திற்கான விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. புத்தாண்டு அன்று மட்டும் சுமார் 8 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.