புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பில் பங்கேற்ற புதுவை அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் மூத்த வழக்கறிஞருமான பரசுராமன் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் இந்நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டது. புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தல் நவம்பர் 2 ஆம்தேதி நடந்தது. புதுச்சேரி மாநில வழக்கறிஞர் சங்கத்திற்கு, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல், நீதிமன்ற வளாகத்தில் காலை 7:00 மணிக்கு துவங்கியது. மொத்தம் 1086 வாக்காளர்கள் உள்ளனர். தலைவர் பதவிக்கு தனசேகரன், குமரன், பொதுச் செயலாளர் பதவிக்கு கதிர்வேல், நாராயண குமார் ஆகியோர் போட்டியிட்டனர். பொருளாளர் பதவிக்கு கார்த்திகேயன், லட்சுமி நாராயணன், ராதாகிருஷ்ணன், இணை செயலாளர் பதவிக்கு அனந்தராஜா, பாலசுந்தரம், பழனிசாமி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
தேர்தல் அதிகாரியான மூத்த வழக்கறிஞர் உதய பாஸ்கர் தலைமையில், துணை தேர்தல் அதிகாரிகளாக சுப்ரமணியன், பச்சையப்பன் செயல்பட்டனர். மாலை 5:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுப்பதிவு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. மாலை 6:00 மணிக்கு துவங்கிய ஓட்டு எண்ணிக்கை நள்ளிரவு வரை தொடர்ந்தது. இந்த நிலையில் மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வெற்றி பெற்றவர்களை அறிவித்தனர். இதை தொடர்ந்து புதுவை வழக்கறிஞர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று நீதிமன்ற வளாகத்தில் சங்க அறையில் நடந்தது. விழாவில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் எம்எல்ஏவுமான பரசுராமன் பங்கேற்றிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.
Covai Day: 217 வது பிறந்த நாள் கொண்டாடும் கோயம்புத்தூர் மாவட்டம்..!
அவரை உடனடியாக அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மரணமடைந்த பரசுராமன், கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை உருளையன்பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர். தற்போது கிழக்கு மாநில அதிமுக அவைத் தலைவராக இருந்தார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மூத்த வழக்கறிஞரின் திடீர் மறைவால் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. முன்னாள் எம்எல்ஏவும் மூத்த வழக்கறிஞருமான பரசுராமன் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுதியது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்