புதுச்சேரி: வில்லியனூரில் வீதியில் திருமண நாள் கொண்டாடியதைத் தட்டிக்கேட்ட புதுமாப்பிள்ளை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சதீஷ் (எ) மணிகண்டன் (28). ஏசி மெக்கானிக் வேலை செய்யும் இவருக்குக் கடந்த 4 மாதத்துக்கு முன்பு மதிவதனா (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவரது எதிர்வீட்டைச் சேர்ந்தவர் சங்கர். நேற்று இரவு சங்கர் (35), அவரது மனைவி ரமணி (28) ஆகியோர் திருமண நாளையொட்டி நடுவீதியில் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். அப்போது ரமணியின் உறவினர் ராஜா (26) மற்றும் அவரது நண்பர்களான தென்னல் பகுதியைச் சேர்ந்த அசார் (23), வில்லியனூர் கணுவாபேட் புதுநகர் தமிழ்ச்செல்வன் (23) ஆகியோர் மது அருந்திவிட்டுப் பொதுமக்களுக்கு இடையூறாக தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனை சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் தட்டிக்கேட்டுள்ளனர்.


 



கொலை செய்யப்பட்ட சதீஷ் (எ) மணிகண்டன்


அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே அங்கிருந்தவர்கள் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து சதீஷ் தனது வீட்டின் வெளியே நின்று போன் பேசியுள்ளார். அப்போது அங்கு வந்த அசார், தமிழ்ச்செல்வன், ராஜா, சங்கர் ஆகியோர் சதீஷைக் கத்தியால் தொண்டை மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சதீஷ் கீழே சரிந்தார். சத்தம் கேட்டு சதீஷின் மனைவி மற்றும் உறவினர்கள் ஓடிவந்தனர். அவர்களைப் பார்த்த கொலைக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதையடுத்து சதீஷை மீட்ட உறவினர்கள் உடனடியாகப் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நள்ளிவு சிகிச்சைப் பலனின்றி சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.




இதுகுறித்து தகவல் அறிந்த வில்லியனூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் பதுங்கியிருந்த அசார், தமிழ்ச்செல்வன், ராஜா, சங்கர், அவரது மனைவி ரமணி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: நீண்ட மீசை வைத்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள்.... சொல்லியும் கேட்காததால் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்த அதிகாரி..!