புதுச்சேரி: புதுச்சேரியில் காதலை கண்டித்தவர் வீட்டில் வெடிகுண்டு வீசிய ரவுடி மற்றும் வானுார் அருகே உள்ள பட்டானுாரை சேர்ந்த கல்லுாரி மாணவர்  கமலேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

Continues below advertisement

காதலை கண்டித்தவர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு

விழுப்புரம் மாவட்டம், வானுார் அருகே உள்ள பட்டானுாரை சேர்ந்த கமலேஷ், (வயது 20), புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலையில் இளநிலை குற்றவியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர், கோரிமேடு பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதனை, அறிந்த தட்டாஞ்சாவடி ஞானதியாகு நகர் ஒத்தவாடை வீதியை சேர்ந்த பெயின்டர் ரிச்சர்டு, அவரது மகன் விபிஷன் ஆகியோர், சில மாதங்களுக்கு முன் கமலேஷை அழைத்து அந்த பெண்ணுடன் பேசகூடாது எனக்கூறி தாக்கியதாக கூறப்படுகிறது.

நாட்டு வெடிகுண்டு வெடிக்காததால் பெட்ரோல் குண்டு

இது குறித்து கமலேஷ், சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த தனது நண்பர் புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த ரவுடி விஜய்,25; என்பவரிடம் கூறினார். அதனைத் தொடர்ந்து இருவரும் நேற்று முன்தினம் இரவு, பைக்கில் சென்று, ஞானதியாகு நகரில் உள்ள ரிச்சர்டு வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசினர். அது வெடிக்காததால், பெட்ரோல் குண்டு வீசினர். அது, ஜன்னலில் பட்டு வெடித்து தீப்பிடித்து எரிந்தது.

Continues below advertisement

போலீஸ் விசாரணை

இதில் ரிச்சர்டு மற்றும் குடும்பத்தினர் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வெடி சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டதால், விஜய், கமலேஷ் அங்கிருந்து தப்பினர். தகவலறிந்த தன்வந்திரி நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அங்கு, வெடிக்காமல் கிடந்த நாட்டு வெடிகுண்டை கைப்பற்றினர்.

புதுச்சேரி நீதிமன்றத்தில் சரண்

இதுகுறித்து ரிச்சர்டு அளித்த புகாரின் பேரில், கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விஜய், கமலேஷை தேடி வந்தனர். இந்நிலையில், இருவரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இருவரையும், 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இருவரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். புதுச்சேரியில் காதலை கண்டித்தவர் வீட்டில் வெடிகுண்டு வீசிய ரவுடி மற்றும் கல்லுாரி மாணவரின் இந்த செயல் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.