வில்லியனூர் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்த 5 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.


புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள ஊசுட்டேரி பகுதியில் ரவுடிகள் சிலர் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் உத்தரவின் பேரில், வில்லியனூர் காவல் ஆய்வாளர் வேலையன் மற்றும் போலீசார் ஊசுட்டேரி பகுதியில் ரவுடிகள் இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.


அப்போது அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அதனை தயாரிக்க வைத்திருந்த வெடி மருந்துகள், ஆணி, பால்ரஸ் குண்டு மற்றும் அரிவாள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற ரவுடிகளில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வில்லியனூர் பெரிய பேட் பகுதியைச் சேர்ந்த பாம் ரவி என்கிற ரவிவர்மன், கோடம்பாக்கம் பகுதி சேர்ந்த அன்பு என்ற அன்பரசன், அவரது தம்பி கவியரசன், கோர்க்காடு பேட் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற பாட்டில் மணி மற்றும் ஸ்டீபன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


மேலும் சதி திட்டத்திற்கு உடந்தையாக இருந்ததாக தப்பி ஓடிய காலாப்பட்டு பகுதி சேர்ந்த பிரபல ரவுடி சுகன் மற்றும் புதுவை வண்ணாரப்பேட்டை சேர்ந்த வெள்ளை விஜி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், பிரபல ரவுடி ஒருவரை, பழிக்கு பழியாக கொலை செய்ய திட்டம் தீட்டி வெடிகுண்டுகள் தயாரித்து பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து 5 பேரையும் போலீசார நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி, அவர்களை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு 5 ரவுடிகளை கைது செய்த போலீசாருக்கு காவல் கண்காணிப்பாளர்  ஜிந்தா கோதண்டராமன் பாராட்டு் தெரிவித்தார். வெடிகுண்டுகளுடன் ரவுடிகள் கைது செய்த சம்பவம் வில்லியனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.