புதுச்சேரி திருபுவனைப் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக தொடர் வழிப்பறி நடைபெற்று வருகின்றது. இதில் சில மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன்களை பறித்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இந்நிலையில் திருபுவனை-சன்னியாசிகுப்பம் சாலையில் உள்ள ரைஸ் மில் சந்திப்பில் உள்ள தனியார் தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் பிஸ்வேஸ்வர் ஜனா (42) என்பவரிடமிருந்து மூன்று பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றுள்ளனர். அவர் திருபுவனை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் வழிபறி குற்றவாளிகளை தேடி வந்தனர்.

Continues below advertisement


இந்த சம்பவங்கள் குறித்து மேற்கு பிரிவு கண்காணிப்பாளர் வம்சிதரெட்டி, ஆய்வாளர் கீர்த்திவர்மன் ஆகியோரின் உத்தரவின் பேரில், திருபுவனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளங்கோ மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள் அசோக், சத்தியமூர்த்தி ஆகியோர் அடங்கிய தனிப்படை மூன்று பேர் கும்பலை இரவு நேர வாகன சோதையில் திருபுவனை சென்ட்ரல் திரையரங்கம் அருகில் வாகன சோதனையில் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.


அவர்களிடம் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் பரிசுரெட்டிபாளையம் சிவனு மகன் ராம்பிரசாத் 20, கண்டமங்கலம் அருகே உள்ள விநாயகபுரம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த வேலாயுதம் மகன் ராஜவேல் 19, மதகடிப்பட்டு புதிய காலனி பகுதியை சேர்ந்த நாகப்பன் மகன் வசந்த் 19, என்பது தெரியவந்தது, இவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் திருபுவனைப் பகுதியில் உள்ள மதகடிப்பட்டு சந்திப்பு, திருபுவனை சந்திப்பு, திருவண்டார்கோவில் சந்திப்பு, திருபுவனை பிப்டிக் எலக்ட்ரானிக் பார்க், திருக்கனூர் சாலை ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் வாகன ஓட்டிகளை வழிமறித்து அவர்களிடம் இருந்து 14க்கும் மேற்பட்ட செல்போன்களை வழிப்பறி செய்தது தெரியவந்தது. இதன் மதிப்பு இரண்டு லட்சமாகும்.


மதகடிப்பட்டு சந்திப்பில் செல்போன் கடை வைத்து நடத்தி வரும் சுந்தரம் 37, என்பவர் வழிப்பறி செய்த செல்போன்களை வாங்கியது தெரியவந்தது. அதனால் சுந்தரத்தை கைது செய்து  14 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.