புதுச்சேரி: புதுச்சேரியில் வாட்ஸ் ஆப்பில் வந்த குறுஞ்செய்தியில் வட்டார போக்குவரத்து அதிகாரி அனுப்புவது போன்ற இ - செலான் லிங்க்கை கிளிக் செய்ததில் 13 பேரிடம் 16.50 லட்சம் ரூபாயை ஆன்லைன் மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது.

Continues below advertisement

வாட்ஸ் ஆப்பில் வந்த குறுச்செய்தி; 13 பேரிடம் ரூ.16.50 லட்சம் மோசடி

புதுச்சேரியில் உப்பளத்தை சேர்ந்த நபருக்கு வாட்ஸ் ஆப்பில் வந்த குறுஞ்செய்தியில், வட்டார போக்குவரத்து அதிகாரி அனுப்புவது போன்ற இ - செலான் இருந்தது. அதை உண்மை என நம்பி, அதை கிளிக் செய்து, அதில் கேட்கப்பட்ட தனது வங்கி விபரங்களை தெரிவித்தார். அதன்பின், அவரது வங்கிக்கணக்கில் இருந்த 3 லட்சத்து 98 ஆயிரத்து 500 ரூபாயை மர்ம நபர் எடுத்து ஏமாற்றியுள்ளனர்.

இதேபோல், லாஸ்பேட்டையை சேர்ந்த நபர் 5 ஆயிரம், நைனார்மண்டபத்தை சேர்ந்த நபர் ஒரு லட்சத்து 49 ஆயிரம், கொம்பாக்கம் நபர், ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 830, லாஸ்பேட்டை பெண் 3 லட்சத்து 75 ஆயிரம், தட்டாஞ்சாவடி நபர் 19 ஆயிரத்து 600, ராதாகிருஷ்ணன் நகர் நபர் 16 ஆயிரத்து 700, முருங்கபாக்கம் பெண் 2 லட்சத்து 45 ஆயிரத்து 300, வீமன்நகர் நபர் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 114, சண்முகாபுரம் நபர் 11 ஆயிரம், குண்டுபாளையம் நபர் 32 ஆயிரத்து 676, மங்கலம் நபர் 10 ஆயிரம், ரங்கபிள்ளை வீதியை சேர்ந்த நபர் 45 ஆயிரம் என, 13 பேர் 16 லட்சத்து 50 ஆயிரத்து 720 ரூபாய் இழந்துள்ளனர். புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.

Continues below advertisement

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ரூ.10.38 லட்சம் ஏமாற்றம் !

கதிர்காமத்தை சேர்ந்தவர் வினோதன், இவரை, இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் வர்த்தகத்தில் முதலீடு செய்து இரடிப்பு லாபம் பெறலாம் என, கூறினார். இதைநம்பி, மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் முதலீடு செய்தார். பின், அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.

இதேபோல், கலித்தீர்த்தாள்குப்பத்தை சேர்ந்த சச்சிதானந்தம்,30, என்பவர், பகுதி நேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 6 லட்சத்து 78 ஆயிரம் முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.