புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள பகுதி நெல்லித்தோப்பு. அந்த மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் இதுவும் ஒன்று. நெல்லித்தோப்பு பகுதியில் அழகு நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த அழகு நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, உருளையான்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்து அந்த அழகு நிலையத்தை நடத்தி வந்துள்ளனர். அந்த அழகு நிலையத்திற்குள் சென்ற போலீசார் ஆய்வு நடத்தியபோது, அங்கு விபச்சாரம் நடப்பதை உறுதி செய்தனர். மேலும், அழகு நிலையம் என்ற பெயரில் விபச்சாரத் தொழில் செய்து வந்த அழகு நிலைய உரிமையாளர் செந்தில்குமார் மற்றும் வாடிக்கையாளர் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது அங்கு கைது செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் 4 பேரில் வினோத் மறறும் நட்ராஜ் என்ற இருவரும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் தமிழ்நாடு பட்டாலியன் போலீசாராக பணியாற்றி வருகின்றனர்.




இதையடுத்து, கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட 4 பேர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அழகு நிலையத்தில் பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்பட்ட 5 பெண்களை போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அழகு நிலையம் என்னும் பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களுடன் இருந்த போலீசாரை போலீசாரே கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.