விழுப்புரம்: கோட்டகுப்பம் அருகே சதுரங்க வேட்டை பட பாணியில் தங்க புதையல் காசு இருப்பதாக கூறி பஞ்சர் கடை உரிமையாளரிடம் பணம் மோசடி செய்ததாக தந்தை. மகன் உட்பட 6 பேரை கைது செய்த கோட்டகுப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் வசித்து வருபவர் துரைக்கண்ணு (51). இவர் நடமாடும் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் புதுச்சேரி அடுத்த கீழ் புத்துபட்டு பகுதியில் ஜேசிபி வாகனத்திற்கு பஞ்சர் ஒட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அதன் ஓட்டுநர் தனது நண்பரிடம் தங்க காசு புதையல் இருப்பதாகவும் விலை குறைவாக கொடுத்து வாங்கி கொள்ளலாம் என அவரை மூளை சலவை செய்துள்ளார். பிறகு ரூ.50 ஆயிரம் பணத்துடன் கோட்டகுப்பம் அருகே வர சொல்லியிருக்கிறார். பணத்தை எடுத்து கொண்டு துரைக்கன்னு சென்றுள்ளார். அப்பொழுது 1 கிராம் மதிப்புள்ள தங்க காசை கொடுத்து இதனை பரிசோதிக்க கொடுத்துள்ளனர்.
துரைக்கண்ணு புதுச்சேரியில் உள்ள தனது நண்பர் கடையில் கொடுத்து பரிசோதித்து உள்ளார். அதில் அந்த காசு தங்கம் என உறுதியானது. இதனையடுத்து சில நாட்கள் கழித்து துரைக்கண்ணுவை விழுப்புரம் அருகே பணையபுரம் வரவழைத்து அவரிடம் செப்பு காசை ஒரு பையில் முடித்து கொடுத்து சென்றுள்ளனர். பிறகு துறைக்கண்ணு அந்த பையை திறந்து பார்த்தவுடன் அதில் முழுவதும் செப்பு காசுகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த துரைக்கன்னு புதுச்சேரி அடுத்த கோட்டகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் கோட்டகுப்பம் போலீசார் செல்போன் சிக்னல் மூலம் ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் இந்த ஆறு பேரும் இந்த சம்பவம் மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பல லட்சம் மோசடி செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சதுரங்க வேட்டை பட பாணியில் நூதன மோசடி நடந்து உள்ள சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது