பப்ஜி என்ற இணையதள விளையாட்டில் ஆபாசமாக பேசி யூ டியூப்பில் வீடியோ பதிவேற்றம் செய்ததாகவும், பப்ஜி விளையாட்டு மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரது மனைவி கிருத்திகாவை மட்டும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். மதன் தற்போது சிறையில் உள்ளார். அவர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 



சொகுசு கார் : 


பப்ஜி மதன் கைதின் போது ஜாமினில் வெளிவந்த அவரது மனைவி கிருத்திகாவிடம், ‛சொகுசு கார் எப்படி வந்தது’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த கிருத்திகா, ‛தங்களிடம் எந்த சொகுசு காரும்... இல்லை என்றும், ஆடி கார் மட்டுமே உள்ளதாகவும் பதிலளித்தார். இந்த பதிலானது கடும் விமர்சனம் மற்றும் வைரலுக்கு உள்ளானது. அதன் பின் தன்னை பார்க்க வந்த மனைவியிடம் ‛சொகுசு கார் இல்லை என்று சொல்லாதே... நம்மிடம் இருப்பது சொகுசு கார்தான்...’ என மதன் கூறியதும் நடந்தது.


அப்பொழுது சொகுசு கார் தன்னிடம் இல்லை என்று கூறிய கிருத்திகா, தற்போது தங்களிடம் இருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு ஆடி ரக கார்களும் வேண்டும் என்று சைதாப்பேட்டை 11 வது நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். 


இதுகுறித்து கிருத்திகா அளித்த மனுவில், Audi A6 காரானது 13 லட்ச ரூபாய்க்கும், Audi R8 காரை 47 லட்ச ரூபாய்க்கு வாங்கினோம். இந்த இரண்டு கார்களையும் சாப்ட்வேர் என்ஜினியரான நானும், தனது கணவர் மதன் யூ டியூப் மூலமும் சம்பாதித்த பணத்தில் மட்டுமே வாங்கினோம் என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும், கடந்த ஓராண்டு காலமாக சாப்ட்வேர் என்ஜினியரான நான், வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்தேன். தற்போது கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அலுவலகம் சென்று பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கிற்கும் எங்களது கார்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனவே, காவல்துறை சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட எங்களது ஆடி ரக சொகுசு கார்கள் இரண்டையும் உடனடியாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 



முன்னதாக, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதன் மற்றும் அவரது மனைவி மீதான குற்றப்பத்திரிகையை  தாக்கல் செய்தனர். அதில், மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா மீதான வழக்கில் மொத்தம் 32 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பப்ஜி மதன் மீது மொத்தம் 150-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தநிலையில், மொத்தம் 32 பேர் மட்டும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். இதுமட்டுமின்றி, கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்வதாக கூறி ரூபாய் 2 ஆயிரத்து 848 நபர்களிடம் ரூபாய் 2 கோடியே 89 லட்சம் ரூபாய் பணமோசடி செய்ததாகவும் காவல்துறை தரப்பில் மதன் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இதில் பெறப்பட்ட பணம் மூலமாகதான் இருவரும் இந்த இரண்டு ஆடி ரக கார்களை வாங்கியதாகவும் அந்த குற்றப்பத்திரிகையில் தகவல் தெரிவித்திருந்தனர். 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்