பப்ஜி என்ற இணையதள விளையாட்டின்போது பிறருடன் ஆபாசமாக பேசி அதை யூ டியூப்பில் வீடியோவாக தொடர்ந்து பதிவிட்டு வந்த யூடியூபர் மதனை கடந்த மாதம் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, அவரது மனைவி கிருத்திகாவையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மதன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மதன் மீது இன்று குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 


இதையடுத்து, இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள அவரது மனைவி கிருத்திகா இன்று சென்னை காவல் ஆணையர் அலுவகத்திற்கு வந்து காவல் உயரதிகாரிகளை சந்தித்தார். பின்னர், பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது,




மதன் மீது 200 பேர் வரை புகார் அளித்துள்ளதாக கூறப்படுவது தவறு. 4 பேர் மட்டுமே புகார் அளித்துள்ளனர். என்னிடம் பணம் வாங்கினார் என்றோ, அல்லது அவர் பணத்தை ஏமாற்றிவிட்டார் என்றோ யாருமே மதன் மீது புகார் அளிக்கவில்லை. ஆதாரத்தை சமர்பித்தால் சட்டப்படி அதை எதிர்கொள்கிறோம். ஆதாரமே இல்லாமல் 200 புகார் இருப்பதாக கூறுகிறார்கள். இதுவரை ஒரு ஆதாரம்கூட எனது வழக்கறிஞர் மூலம் எனக்கு கிடைக்கவில்லை.


மதனை வேண்டும் என்றே பேச வைப்பதற்காக சிலர் தூண்டிவிட்டு பேச வைத்தனர். இவற்றில் பல வீடியோக்கள் சித்தரிக்கப்பட்டவை. வீடியோவில் இருப்பது மதனின் குரல்தானா? மதன்தான் பேசியதா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மதனை அவ்வாறு பேச வைத்த நான்கு பேரையும் கேள்வி கேட்க வேண்டுமல்லவா? அவர்கள் திட்டமிட்டு மதனை அவ்வாறு பேச வைத்துள்ளனர். ஆத்திரமூட்டும் வகையில் கமெண்ட் பதிவிட்ட காரணத்தாலே மதன் ஆபாசமாக பேச நேர்ந்தது.




மதனிடம் இருப்பது ஆடி கார் மட்டுமே. அவரிடம் வேறு சொகுசு கார்கள் இல்லை. மதன் வைத்துள்ள யூ டியூப் சேனல் மற்றும் சூப்பர் சாட் மூலம் மட்டுமே எங்களுக்கு வருமானம் வந்தது. மதனுடன் ஒருநாளும் நான் வீடியோ கேம் லைவில் பேசியது இல்லை. வீடியோவில் இருப்பது என்னுடைய குரலும் இல்லை. என்னுடைய வங்கிக்கணக்கு மட்டுமே யூ டியூப் சேனலுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றபடி, யூ டியூப் சேனலுக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.


நான் வேலை பார்த்துக் கொண்டிருப்பதால் எனக்கு பப்ஜி விளையாடுவதற்கு எல்லாம் நேரம் இல்லை. எனக்கு எந்தவித தொடர்பும் இந்த விவகாரத்தில் தொடர்பு இல்லாத காரணத்தினால்தான் ஜாமீன் கிடைத்து வெளியே வந்துள்ளேன். தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை மதன் விளையாடவில்லை. எங்களுக்கு சட்டவிரோதமாக எந்த வருமானமும் வந்ததே கிடையாது.


20 மணி நேரம் கடினமாக யூ டியூப்பில் நேரடி ஒளிபரப்பு செய்து உழைத்து சம்பாதித்தன் மூலமாகவே எங்களுக்கு வருமானம் வந்தது. 3 வருடங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்தவை இவை. இவ்வாறு அவர் கூறினார்.