சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மது போதையில் திடீரென நுழைந்த தனிஷ் நாயர் (36) என்ற இளைஞர் அங்கிருந்த காவலர்களிடம் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்துள்ளதாக கூறினார். காவல்துறையினர் இரவு நேரத்தில் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை என்று மறுத்தனர். பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே செல்ல ஓட்டம் எடுத்தார். உள்ளே சென்றவரை காவல்துறையினர் பிடித்து வந்து அமர வைத்தனர். காவல்துறையினர் அஜாக்கிரதையாக இருந்ததால் தப்பிச்சென்ற தனிஷ் நாயர் காவல்துறையினரை தகாத வார்த்தையில் பேசினார்.


பின்னர் அவரை அழைத்துச் செல்ல வந்த காவலர் வாகனத்தை மறைத்து அங்கிருந்து தப்பிய அவர் அருகில் இருந்த அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு சென்று பிரசவ வார்டு மற்றும் கொரோனா வார்டுகளில் அனுமதியின்றி உள்ளே நுழைந்தார். இங்கிருந்து சாலைக்கு வந்த அவர் தனியார் பேருந்து மீது ஏறி அதிலிருந்த ஸ்டெப்னி டயரை கிழே தள்ளி விட முயன்றார். மிகவும் கூட்ட நெரிசல் அதிகமுள்ள பகுதி என்பதால் சாலையில் சென்று கொண்டிருந்த மக்களின் கவனம் முழுவதுமாக அவர் மீது திரும்பியது. இதனால் இங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. 



பின்னர், மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவரை காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அப்போது அவரை விசாரித்ததில் கேரளாவில் பிறந்த நான் ஐஐஎம் அகமதாபாத்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு தற்போது ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறேன். சேலம் ஏற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் எங்களது நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் கொடுப்பதற்கு சிறப்பு விருந்தினராக வந்த தன்னை, சேலம் காவல்துறையினர் அடித்து உதைத்ததால் தனது பற்கள் உடைந்து விட்டது. எனவே இதுகுறித்து நான் மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். காவல்துறையினரே அலட்சியத்தினால் அவர் மீண்டும் தப்பிச் சென்றார். 



அவர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விட்டுச்சென்ற அவரது கைபேசிக்கு ஹைதராபாத்தில் நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. அதில் இன்று இரவு 11 மணிக்கு தனிஷ் நாயர் ஹைதராபாத் திரும்புவதற்காக பேருந்து டிக்கெட் போடப்பட்டுள்ளதாக கூறினர். நடந்ததை எடுத்துக் கூறிய காவல்துறையினர் அவரைப் பற்றி முழுமையாக தகவலை பெற்றுக் கொண்டனர். பின்னர் இங்கு நடந்ததை கூறிய காவல்துறையினர் தனிஷ் நாயர் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றனர். அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு குடும்பத்தினர் பற்றி தெரியவில்லை என்று கூறிவிட்டனர். மேலும் தனிஷ் நாயர் மன அழுத்தம் காரணமாக தினம்தோறும் மருந்து அருந்த வேண்டும். பிள்ளைகள் அவர் சைக்கோ போல் நடந்து கொள்வார் என்று கூறினர். தப்பிச்சென்ற தனிஷ் நாயர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள சாலைகளில் சுற்றித் திரிகிறார். இதுவரை காவல்துறையினரால் அவரை பிடிக்க முடியவில்லை. காவல்துறையினரின் அலட்சியப் போக்கினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.