திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த உள்ள அகரம்பள்ளிப்பட்டு கிராம நிர்வாக அதிகாரியாக வெங்கடாசலம் என்பவர் பணியாற்றி வருகிறார். இதனிடையே அதே கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவர் திமுகவின் கிளை செயலாளராக இருந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று மதியம் கிராம நிர்வாக அதிகாரி வெங்கடாஜலத்திடம் சிட்டா அடங்கல் வேண்டும் என திமுக நிர்வாகி பாபு கேட்டுள்ளார். இதற்கு விஏஓ உங்கள் பெயரில் எந்த விளை நிலமும் இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த திமுக நிர்வாகி பாபு கிராம நிர்வாக அதிகாரியை தண்டராம்பட்டு தாலுகா அலுவலகம் எதிரே கொலைவெறி தாக்குதல் நடத்தியதுடன் கிராம நிர்வாக அலுவலகத்தையும் அடித்து சூறையாடியுள்ளார்.
இதுகுறித்து தாக்குதலுக்கு உள்ளான கிராம நிர்வாக அதிகாரி தண்டராம்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனக்கு சொந்தமில்லாத நிலத்தில் நெல் அறுவடை செய்துள்ளதாக கூறி அடங்கல் வழங்குமாறு அராஜகத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகி பாபு என்பவர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்ய வேண்டும். இதற்கு உடனடியாக சிட்டா வழங்க வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார். இந்த அச்சுறுத்தலுக்கு அஞ்சாமலும் சிட்டா, வழங்காமல் காலதாமதம் செய்ததால் தன் மீது பாபு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்திய தோடு கிராம நிர்வாக அலுவலரான என் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் தாக்குதல் நடத்தியவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்றும், இதனால் பாதிக்கப்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் அனைவரும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தண்டராம்பட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தாக்குதல் நடைபெற்று பல மணி நேரம் கடந்த பின்னரும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தண்டராம்பட்டு தாசில்தார் பரிமளா தண்டராம்பட்டு காவல் நிலையத்திற்கு வருகை தந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். ஆனால் தண்டராம்பட்டு காவல் நிலைய ஆய்வாளர், துணை ஆய்வாளர் என உயர் அதிகாரிகள் யாரும் இல்லாததால் புகாரை வாங்க மறுத்தனர். இதனால் கிராம நிர்வாக அதிகாரிகள் காவல் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டத்துடன் தாக்குதல் நடத்தியவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும் எனவும் இரவு முழுவதும் காத்திருந்தனர். மேலும், தற்போது அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு புகாரை மட்டும் காவல்துறையினர் பெற்றுக் கொண்டு இதுவரை எஃப் ஐ ஆர் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.