காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள வளர்புரத்தைச் சேர்ந்தவர் சங்கர் (42). பாஜக பட்டியலினப் பிரிவு மாநிலப் பொருளாளரான இவர், வளர்புரம் ஊராட்சித் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். ஆலை கழிவுப் பொருட்களை வாங்கி, விற்பனை செய்து வந்த இவர் மீது, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற சங்கர், பின்னர் காரில் தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.


வெட்டிக்கொலை:

 

நசரத்பேட்டை சிக்னல் அருகே வந்தபோது, இரு கார்களில் வந்த மர்ம கும்பல் சங்கரின் காரை வழிமறித்து, 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த சங்கர், காரிலிருந்து இறங்கி, சாலையின் எதிர்புறம் ஓடினார். எனினும், அந்த கும்பல் அவரைத் துரத்திச் சென்று, கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியது. இது தொடர்பாக நசரத்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த பிபிஜிபி சங்கர் பிரபல ரவுடியான பிபிஜி குமரனின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.


 

யார் இந்த பிபிஜி குமரன் ?

 

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள, பிள்ளைப்பாக்கத்தை சேர்ந்தவர் பிபிஜி குமரன், படிக்கும் காலத்திலேயே, சாராயம் விற்றுவந்தார். படிப்பை முடித்த பிறகு, புரட்சி பாரதம் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார். சாராய வியாபாரியாக இருந்து வந்த குமரன் தனது ஆதிக்கத்தின் மூலம் தனியார் தொழிற்சாலைகளிலிருந்து, ஸ்கிராப் சொல்லப்படும் இரும்புக் கழிவுகளை வாங்கி விற்கும் பணியை, 2005-ஆம் ஆண்டு காலகட்டத்தில் துவங்கினார். படிப்படியாக பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் துவங்கி,  சிறு குறு நிறுவனங்கள்  அக்காலத்தில், தான் ஸ்ரீபெரும்புதூரில் அதிதீவிரமாக வளர்ச்சி அடைந்து வந்தது.


 

இதனைப் பயன்படுத்தி தன்னை அதிகார மையமாக மாற்றி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார்.  படிப்படியாக, ஸ்ரீ பெரும்புதூரைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில், கழிவுகளை வாங்கி விற்கத் துவங்கினார். பணம் குவியத் துவங்கியது, ரியல் எஸ்டேட் தொழில், கட்ட பஞ்சாயத்து போன்றவற்றில், ஈடுபடத் துவங்கினார். சினிமா துறையின் மீது உள்ள ஆசையால் படம் ஒன்றை தயாரித்தார். அதிமுக ஆட்சிக்கு வந்த பொழுது, விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்து விலகி தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.  இவர் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால் , அதிமுக இவரை கட்சியில் இருந்து விலகியது.

 

அதே பணியில் நடந்த கொலை 

 

 

2011 ஆம் ஆண்டு ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்ற குமரன் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்ற முயற்சி செய்து அதிமுகவில் போந்தூர் குட்டி ( எ ) வெங்கடேஷ் என்பவரிடம் தோல்வி அடைந்தார். குமார் தன்னை ஏதாவது செய்துவிடுவாரோ என்ற பயத்தில் வெங்கடேஷ், குன்றத்தூர் வைரவன் , போந்தூர் செந்தில் ராஜன் ஆகியோருடன் இணைந்து கூலிப்படையை பயன்படுத்தி, நாட்டு வெடிகுண்டுகளை வீசி 2012-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி குமரனை கொலை செய்தார். இந்த நிலையில் அவரது அண்ணன் பிபிஜிடி சங்கர் கொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

வீடியோ வெளியிட்ட குமரன் மனைவி

 

வாழ் மற்றும் வாழ விடு என்ற தலைப்பில் youtube இல் , பிபிஜி குமரன் மனைவி பிரசித்தா வெளியிட்டுள்ள வீடியோவில்,  எங்கள் குடும்பம், ரவுடி குடும்பம் இல்லை நாங்கள் ரவுடி குடும்பமாக இருந்தால், எங்களை வெட்ட வந்தவர்களை நாங்கள் செய்து முடித்திருப்போம். இரண்டு உயிரை நாங்கள் தூக்கி கொடுத்துவிட்டு நின்று கொண்டிருக்கிறோம். நாங்கள் இதுவரை யார் குடியையும் கெடுத்ததில்லை. சிலர் எங்கள் தலைமுறையை இருக்கக் கூடாது என என்ன  செய்தாலுமே,  தாங்கள் செய்யும் தான தர்மம் எங்கள் குடும்பத்தைக் காக்கும் என தெரிவித்துள்ளார்.