காஞ்சிபுரத்தில் தாதாவாக வரவேண்டும் என சமூக விரோத செயலில் ஈடுபட்டு வருபவர் பொய்யாக்குளம் தியாகு. குறிப்பாக நகரத்தில் பட்டு ஜவுளி வியாபாரிகள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என எல்லோரையும் மிரட்டிவந்தார். பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலர் மட்டுமே புகார் கொடுக்க, கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றார் பொய்யா குளம் தியாகு. தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் கைது செய்வதும் அதன் பிறகு ஜாமீனில் வெளிவந்து, தலைமறைவாகிவிடுவதும் தொடர்கதையாக உள்ளது.



 

முன்னதாக, காஞ்சிபுரம் நகரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் கடந்த 2017-ம் ஆண்டு கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து  கொண்டார். இவரின் முக்கிய கூட்டாளிகளான ரவுடி தினேஷ்குமார் என்பவர் மீது 5 கொலை வழக்குகள் உள்பட சுமார் 30 வழக்குகளும், ரவுடி தியாகு என்பவர் மீது 8 கொலை வழக்குகள், 11 கொலை முயற்சி வழக்குகள் உள்பட சுமார் 51 வழக்குகளும் உள்ளன. ஒரு கட்டத்தில் தினேஷ் குமார் மற்றும் தியாகு ஆகியோர் இருவரும் தனி கோஷ்டிகளாக பிரிந்து கொண்டு, தங்களில் யார் அடுத்ததாக தாதா போட்டியில் 13-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்து கொண்டனர்.

 



இதனை அடுத்து காஞ்சிபுரம் நகரத்தில் கொலைகளை தடுப்பதற்கான காவல்துறை சிறப்பு தனிப்படைகள் அமைத்து இருவரையும் கைது செய்து கடந்த சில வருடங்களாக சிறையில் இருந்து வந்தனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த போது திடீரென்று தலைமறைவானார். தலைமறைவாகவே இருந்து கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட காஞ்சிபுரத்தில் பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மாமுல் தரவில்லை என்பதற்காக தனது அடியாட்களை பயன்படுத்தி காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில்தான் சென்னையின் புறநகர் மாவட்டமாக விளங்கும் காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரவுடிகளை ஒழிப்பதற்காக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார் இதனைத் தொடர்ந்து பழைய ரவுடிகள் மற்றும் புதிய ரவுடிகள் ஆகியோரை கைது செய்ய தனிப்படையினர் தீவிரமாக முயற்சி செய்து வந்தனர்.


அதில் குறிப்பாக படப்பை குணா தினேஷ்குமார் தியாகு ஆகிய 3 பேரை கைது செய்வதற்கு தனிப்படை போலீசார் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வந்தனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடத்திய தனிப்படை காவல்துறையினர் பிற மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். அதன் அடிப்படையில் தியாகு ஹரியானா மாநிலத்தில் பரிதாபாத் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக அந்தப்பகுதியை தொடர்ந்து நோட்டமிட்ட சிறப்பு படையினர் சுற்றிவளைத்து பொய்யாகுளம் தியாகுவை கைது செய்தனர் .



இதனையடுத்து அவரை ஹரியானாவில் இருந்து தனிப்படை போலீசார் விமானம் மூலம் தற்போது சென்னைக்கு அழைத்து வர உள்ளனர் . காவல்துறையில் தன்னை நெருங்கியதை தெரிந்துகொண்ட பொய்யாகுளம் தியாகு தனது மக்களின் உதவியுடன் நீதிமன்றத்தில் சரணடைய முயற்சி செய்தார் என்ற தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபொழுது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து ரவுடிகளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். குறிப்பாக தற்போது பிரபல தாதாவாக விளங்கிவரும் படப்பை குணாவும் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிவித்தனர்.