'நான் அழகாக இல்லை” - உயிரை மாய்த்துக்கொண்ட 12-ஆம் வகுப்பு மாணவன்..!
ஜான்சி மாலாஸ்ரீ வே | 02 Jul 2021 10:18 AM (IST)
குடும்பத்தினருடன் எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும் பூவேந்தனுக்கு, தான் அழகாக இல்லை என்ற வருத்தம் சிறு வயதில் இருந்தே ஏற்பட்டுள்ளது.
சோழபுரத்தில் மாணவர் தற்கொலை
தான் அழகாக இல்லாத காரணத்தினால், இளம் பெண்கள் தன்னிடம் பேசுவதில்லை என்று தானாகவே நினைத்துக்கொண்டு, விரக்தியில் இருந்த 12 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கும்பகோணப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் மாவட்டம் சோழபுரத்திற்கு அடுத்த பணகுடம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவருக்கு பூவேந்தன் என்ற ஒரு மகனும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்களது குடும்பத்தில் பூவேந்தன் ஒரே மகன் என்பதால் ஆசையுடன் வளர்த்து வந்துள்ளனர். இவர் அங்குள்ள அரசுப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். குடும்பத்தினருடன் எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும் பூவேந்தன் தான் அழகாக இல்லை என்ற வருத்தம் சிறு வயதில் இருந்தே ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் அதனை கண்டுக்கொள்ளாமல் இருந்தாலும் டீனேஜ் வயதில் இது பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. தான் மாநிறமாக இல்லை, பார்ப்பதற்கு அழகாகவும் இல்லை என நினைத்து, தன்னிடம் இளம் வயது பெண்கள் யாரும் பேசாமல் செல்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. பூவேந்தனின் மற்ற நண்பர்களுடன் சிரித்து பேசுகையில் ஏன் என்னிடம் பேசவிரும்புவதில்லை, அழகாக இல்லை என்பது தானோ என்ற தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளப்பட்டு விட்டார் இந்த மாணவன். ஒருவருக்கு வாழ்க்கையில் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டால் எந்தச் செயலையும் செய்துமுடிக்க முடியாது, மேலும் சந்தோஷமாக வாழ முடியாமல் போய் விடும் என்ற கூற்று உண்மைதான் என்பதை இந்தச் சோகச் சம்பவம் காட்டியுள்ளது.
அப்படித்தான் தற்போது 12 ஆம் வகுப்பு படிக்கும் பூவேந்தனின் முடிவு அமைந்துவிட்டது. அழகாக இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையில் இருந்து வந்திருந்த நிலையில், விரக்தியில் பணகுடம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் பூவேந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத்தகவலறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவனின் உடலை மீண்டு பிரதேசப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தன் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான் என்ற செய்தியினை கேட்டப் பெற்றோர்கள் அலறி துடித்தனர். ஆசையாய் வளர்த்த என் செல்வத்தினை இழந்து விட்டோமே என்று பூவேந்தனின் உடலினைப்பார்த்து பெற்றோர்கள் கதறி அழுத நிகழ்வு பார்ப்போரையும் கண் கலங்க செய்தது.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சோழபுரம் காவல்நிலைய போலீசார் என்ன காரணத்திற்காக மாணவர் உயிரிழந்திருப்பார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். பூவேந்தனின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், வேறு எந்தப்பிரச்சனையும் அவனிடம் இல்லை எனவும் ஆனால் தான் அழகாக இல்லை என அடிக்கடி கூறுவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். எனவே மன அழுத்தத்தின் காரணமாக மாணவன் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தான் அழகாக இல்லை என்று 12 வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. அழகு என்பது அவரவர் கற்பனை என்றும், புறத்தோற்றத்தை விட குணம், படிப்பு போன்றவை முக்கியம் என்பதனை யாராவது உணர்த்தியிருந்தால், நிச்சயம் மாணவன் உயிரினை மாய்த்திருக்க மாட்டான் என்ற கருத்தினை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர். பெற்றோர்களும் தங்கள் குழந்தை என்ன மனநிலையில் உள்ளார்கள் என்பதை புரிந்துக்கொள்ள அவர்களுடன் நண்பர்களாய் பழகினால் நிச்சயம் இளம் வயது மாணவர்களுக்கு தற்கொலை என்ற எண்ணமே வரவாய்ப்பில்லை என்பது தான் நிதர்சன உண்மை.