புதுச்சேரியில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று போலீஸ் ஐ.ஜி. சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சுற்றுலா வளர்ச்சிக்கு புதுச்சேரி அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆனால் இதை கெடுக்கும் வகையில் சமீப காலமாக கஞ்சா புழக்கம் தலை தூக்கியுள்ளது. கஞ்சா விற்பவர்களை ரகசியமாக கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் களம் இறங்கி உள்ளனர். இந்தநிலையில் தமிழகத்தில் கஞ்சா விற்பவர்களை போலீசார் இல்தீவிரமாக கைது செய்து வருகின்றனர். இதனால் கஞ்சா விற்கும் குற்றவாளிகள் பலர் புதுச்சேரியில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


இதையொட்டி ஐ.ஜி. சந்திரன் காவல்துறை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


புதுவைக்கு வடமாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் மூலமாக அதிகளவில் கஞ்சா கடத்தி வருவது தெரியவந்துள்ளது. இதை அடுத்து ரெயில்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா வழக்குகள் அதிகரித்து வருகிறது. 2016 ஆம் ஆண்டு 3 கஞ்சா வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு, 550 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. இது கடந்த 2020 ஆம் ஆண்டில் 36 வழக்குகளாக அதிகரித்தது. 107 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு 72 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 129 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 91 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 20 வழக்குகள் பதிவு செய்து, 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.




முன்பு கஞ்சா விற்பனை செய்தால் மட்டும் தான் காவல்துறை நடவடிக்கை எடுத்து வந்தது. இனிமேல் கஞ்சா குறைந்த அளவு வைத்திருந்தாலும், கஞ்சா புகைத்தாலும் கைது செய்யப்படுவார்கள். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களாக இருந்தாலும் சரி, இந்த நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது.  18 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்கள் கஞ்சா பயன்படுத்தி கைது செய்யப்பட்டால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு தான் செல்ல வேண்டும். இவ்வாறு போதை பழக்கத்திற்கு அடிமையாகும் குழந்தைகளின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் பெற்றோர் தங்கள் குழந்தைகளையும், அவர்களது நண்பர்களையும் கண்காணிக்க வேண்டும். கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்தல், பொது இடங்களில் மது குடிப்பது தெரியவந்தால் உடனடியாக 112 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். 94892 05039 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தகவல் கொடுக்கலாம். புகார் செய்வோரின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். புகார் தெரிவித்த 10 நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். புதுவையில் கஞ்சா விற்பனை செய்த 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இனியும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.




சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். பொதுமக்கள் சமூக வலைத்தளங்களை கவனமாக கையாள வேண்டும். தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு பதில் அளிக்க கூடாது. சைபர் கிரைம் போன்ற குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் தற்போது நியமிக்கப்பட்டு, முறையான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையில் காலியாக உள்ள காவலர்கள், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.