நீலகிரியில் கள்ளக்காதலியை கொலை செய்து விட்டு கொரோனாவால் உயிரிழந்ததாக நாடகமாடிய காவல் துறை உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பி 1 காவல் நிலையக் குடியிருப்பில் வசித்து வருபவர் முஸ்தபா. 56 வயதான இவர், நீலகிரி மாவட்ட கியூ பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். முஸ்தபாவிற்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே முஸ்தபாவிற்கும், காந்தல் புதுநகரை சேர்ந்த 51 வயதான மாகி என்ற பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அவருக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அண்மையில் மாகிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த மாகி, குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.




சிகிச்சையிலிருந்து திரும்பிய கள்ளக்காதலிக்கு புத்துணர்வு தரும் விதமாக, முஸ்தபா ஊட்டி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு மாகியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் தங்கி உல்லாசம் அனுபவித்தாக தெரிகிறது. பார்ட்டி கொடுத்து இருவரும் உச்ச போதையில் இருந்துள்ளனர். அப்போது எஸ்.ஐ.,யிடம் மாகி செலவிற்கு பணம் கேட்டதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரத்தில் மாகியை கழுத்தை நெறித்து முஸ்தபா கொலை செய்துள்ளார். பின்னர் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க திட்டமிட்ட முஸ்தபா, மாகி கொரோனா சிகிச்சை பெற்று வந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என திட்டமிட்டுள்ளார். அதன்படி மாகியின் உடலை துணியால் சுற்றி காரில் அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்ற முஸ்தபா, உறவினர்களிடம் கொரோனா தொற்றால் மாகி உயிரிழந்ததாக கூறி உடலை ஒப்படைத்துள்ளார்.




உடலைப் பெற்ற உறவினர்கள் மாகியின் முகம் மற்றும் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தனர். உடனடியாக இது குறித்து ஜி1 ஊட்டி நகர மேற்கு காவல் நிலையத்திற்கு மாகியின் உறவினர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் மாகியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.




இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். உதவி ஆய்வாளர் முஸ்தாபாவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக கள்ளக் காதல் இருந்து வந்ததாகவும், சம்பவ நாளான்று இருவரும் மது அருந்திய நிலையில் தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. மேலும் குடிபோதையில் மாகியை கண்மூடித்தனமாக முஸ்தபா அடித்ததும், கழுத்தை நெறித்து கொலை செய்ததும் தெரியவந்தது. முஸ்தபா மாகியை கொலை செய்த பின்னர், தப்பிக்கும் நோக்கத்தில் கொரோனாவால் உயிரிழந்ததாக நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து முஸ்தபா மீது வழக்குப் பதிவு செய்த ஊட்டி காவல் துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.