ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூர்  கடற்கரைக்கு சென்ற மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 வாலிபர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தயக்கம் காட்டி  வருகின்றனர். விருதுநகரில்  நடந்த பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் வழக்கில் அந்த மாவட்ட காவல்துறை காட்டிய வேகத்தை சாயல்குடி அருகே  மூக்கையூர் கடற்கரையில் ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த இளம்பெண்ணின் துப்பட்டாவால் காதலனை கட்டிப்போட்டுவிட்டு  கஞ்சா போதையில் இருந்த மூன்று இளைஞர்களால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை வேகம்   காட்டவில்லை என புகார் கூறப்படுகிறது.




விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர், தனது காதலியான கல்லூரி மாணவியுடன், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரைக்கு கடந்த மார்ச் 23 ஆம் தேதி சென்றிருந்தார். அப்போது, அவர்களிடம் 3 பேர் கொண்ட கும்பல் பணம் மற்றும் நகைகளை பறித்துக்கொண்டதுடன் , மேலும் அந்த 3 பேரும் சேர்ந்து கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.  சம்பவம் நடந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் (சாயல்குடி காவல் நிலையத்தில்) வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்தநிலையில், நகை மற்றும் வழிப்பறி தொடர்பாக மட்டும்  அருப்புக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்தனர். 


மேலும், இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் கே.வேப்பங்குளம் பத்மேஸ்வரன் (24), நத்தகுளம் தினேஷ்குமார் (23) ஆகிய இருவரையும் மடக்கி பிடிக்க முயன்றபோது அந்த இரண்டு பேரும் இரண்டு  போலீசாரை வாளால் வெட்டிவிட்டு, தப்ப முயன்ற வழக்கில் இருவரும் கைதாகினர். இதனிடையே இந்த சம்பவத்தில் முக்கிய நபராக கருதப்படும் அஜீத் விக்னேஸ்வரன் (24) என்பவர் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.


விசாரணையின்றி வழக்கை மூட முயற்சியா.!


கூட்டு பலாத்கார சம்பவம் தொடர்பாக மாணவியிடம் நீதிபதியால்  வாக்குமூலம் பெறப்பட்டது. இந்த சம்பவம் நடந்த இடம் ராமநாதபுரம் மாவட்ட பகுதியாக இருப்பதால் இந்த வழக்கு விசாரணையை ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு மாற்றி தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகாக் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அதுதொடர்பான ஆவணங்களை பெற்று சாயல்குடி போலீசார் வழக்கினை விசாரிக்க மாவட்ட எஸ்.பி. கார்த்திக் உத்தரவிட்டார்.



இதனை தொடர்ந்து, சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா இந்த வழக்கினை நீண்ட காலதாமதத்திற்கு பிறகே கற்பழிப்பு வழக்காக மாற்றம் செய்து, விசாரணையை தொடங்கினார். இந்நிலையில் நகை பறிப்பு, போலீசார் மீது தாக்குதல், வழிப்பறி வழக்குகளில் கைதாகி உள்ள 3 வாலிபர்களையும் கற்பழிப்பு வழக்கிலும் கைது செய்து போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கான முறையாக வழக்கு இணைப்பு ஆவணத்தினை  நீதிமன்றம் மூலம் பெற்று, மதுரை சிறையில் நேற்று முன்தினம் போலீசார் வழங்கி உள்ளனர்.  இதுதவிர, கூட்டு வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக தொடர் விசாரணை நடத்த மேற்கண்ட 3 வாலிபர்களையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் இன்னமும் கால தாமதப்படுத்தி வருகின்றனர்.



இது தொடர்பாக  காவல்துறையினரிடம் கேட்டதற்கு, இதற்கான முறையான கடிதம் காவல்துறையின் சார்பில் கடலாடி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி கிடைத்ததும் 3 வாலிபர்களும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படுவதோடு சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரிக்கவும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மாவட்ட எஸ்.பி கார்த்திக் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர புலன்விசாரணை நடத்தி, விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும்,  இதற்கான விசாரணையை துரிதப்படுத்த கமுதி மற்றும் கீழக்கரை டிஎஸ்பிக்கள் தலைமையிலான  தலைமையில் தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.இதையடுத்து விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன், மாடசாமி, ஜுனத் அகமது, பிரவீன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்தினர். வழக்கில் தொடர்புடைய 4 பள்ளிமாணவர்களும் கூர்நோக்கி இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணையை நிறைவு செய்துள்ளது. காவலில் எடுக்கப்பட்ட 4 பேரிடமும் 6 நாட்களாக சிபிசிஐடி நடத்திய விசாரணை நிறைவடைந்துள்ளது.


'சிரமத்தை குறைக்க மூடி மறைக்க முயற்சியா..!'


ஆனால் மூக்கையூர் சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு  அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்களில் இருந்த வீடியோக்களை ஆராய்ந்ததில் இவர்களுடன் சேர்ந்து மேலும் 3 பேர் இவர்களின் கூட்டாளிகள் உள்ளதாகவும் இந்த ஆறு பேரும் இதேபோன்று வெவ்வேறு இளம்பெண்களிடம்  பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருந்த வீடியோகாட்சிகள் அவர்களது மொபைல் போனில் பதிவாகி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அவர்களிடம் உரிய விசாரணை நடத்தினால், பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் எனவும் கூறப்படுகிறது.




ஆனால் இந்த மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில்,  கண் துடைப்பிற்காகவே தனிப்படை அமைத்திருப்பதாக கூறப்படுகிறது. தங்களின் பணிச்சுமையை குறைக்கவும், சிரமங்களை தவிர்க்கும் வகையிலும் இந்த வழக்கில் சிக்கியுள்ள இந்த கும்பல்களின்  குற்றப்பின்னணிகளை மூடி மறைக்க முயற்சி செய்வதாக புகார் எழுந்துள்ளது. எனவே விருதுநகரில் நடந்தது போல, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உரிய விசாரணை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் வலியுறுத்துகின்றனர்.