தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு, பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவை மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி பராமரிப்பு செய்தல் போன்றவற்றிற்கு தேவைப்படும் கூடுதல் செலவீனம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15 ஆவது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில் 2022-2023 ஆம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021 - 2022 ஆம் ஆண்டில், சொத்துவரி தள வீதங்களை (Floor rates) அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும், மற்றும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்துள்ளது.

 



 

இதன்படி திருச்சி மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டு 2022-2023 முதல் 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 1,800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் சொத்துவரி உயர்த்தப்பட உள்ளது. தற்போது உள்ள சொத்து வரியில், வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்படுகிறது. மேலும், தற்போதைய சீராய்வு அடித்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாக பிரித்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளைப் பொறுத்தவரை சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அரசு ஆணை வழங்கி உள்ளது. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை அந்தந்த மாநகர மாமன்றங்களின் தீர்மானம் பெற்று சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

 



 

திருச்சி மாநகராட்சியில் தற்போது ஏ, பி, சி என்று 3 வகைகளில் சொத்துவரி வசூல் செய்யப்படுகிறது. பிரதான சாலையில் அமைந்துள்ள பகுதி, பிரதான சாலை அருகே அமைந்துள்ள பகுதி, பிரதான சாலையில் இருந்து தொலைவில் உள்ள பகுதி என்று பிரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக தற்போது குறைந்த பட்சமாக 600 சதுர அடி வீட்டுக்கு 204 ரூபாய் வரி வசூல் செய்யப்படுகிறது என்றால் சீராய்வுக்கு பிறகு இது  255 ரூபாயாக உயரும். அதேபோல் 600 சதுர அடி வீட்டுக்கு தற்போது அதிகபட்சமாக 972 ரூபாய் வரி வசூல் செய்யப்படுகிறது எனில் சீராய்வுக்கு பிறகு இது 1,215 ரூபாயாக ஆக உயரும். திருச்சி மாநகராட்சியில் தற்போது சொத்து வரி வருவாய் ஆண்டுக்கு சராசரியாக 58 கோடி ரூபாய் வசூல் செய்யபடுகிறது. மேலும் சொத்துவரி உயர்த்தப்பட்டதால் நடப்பு நிதியாண்டில் மாநகராட்சியின் சொத்து வரி மூலம் மட்டும் கிடைக்கும் வரி வருவாய் 100 கோடிக்கு மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.