சென்னை, வில்லிவாக்கத்தில் வசித்து வருபவர் அன்பரசு. சென்னை ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், தற்போது ஓய்வுபெற்றுள்ள நிலையில் வீட்டிலே இருந்து வருகிறார். இவருக்கு தற்போது வயது 66. இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் ஓய்வு பெற்றதன் மூலம் கிடைத்த பணத்தை, வில்லிவாக்கத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளார். அவர் கடந்த 37 ஆண்டுகளாக அந்த வங்கியில் பணப்பரிவர்த்தனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அவரது மொபைல் எண்ணுக்கு வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர் தான் வங்கியில் இருந்து பேசுவதாகவும், உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு ஓ.டி.பி. ரகசிய எண் வந்துள்ளது என்றும், அதை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
வங்கியில் இருந்துதான் பேசுகிறார்கள் என்று அவர்கள் கூறியதால் அதை நம்பிய அன்பரசும், அவர்களுக்கு தன்னுடைய செல்போன் எண்ணிற்கு வந்த ஓ.டி.பி. எண்ணை கூறியுள்ளார். இதையடுத்து, அவரது எஸ்.பி.ஐ. வங்கி கிளையில் இருந்த 53 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் பணம் 6 தவணைகளாக எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரது செல்போன் எண்ணுக்கு எந்த குறுஞ்செய்தியும் வராத காரணத்தால் அவரது பணம் பறிபோனது அவருக்கு தெரியவில்லை. பின்னர், அவரது மகனிடம் இந்த தகவலை கூறவும், அவரது மகன் அந்த எண்ணிற்கு போன் செய்து விசாரித்துள்ளார். ஆனால், அவர்கள் முன்னுக்கு பின் முரணாகவும், இந்தியிலும் பேசியுள்ளனர்.
பின்னர், அவரது மகன் இணையவழி பரிவர்த்தனையில் அன்பரசுவின் வங்கிக் கணக்கில் உள்ள இருப்புத்தொகையை ஆராய்ந்தபோதுதான் அவர்களது கணக்கில் இருந்த 53 லட்சம் பறிபோனது தெரியவந்துள்ளது. இதனால், அன்பரசு மற்றும் அவர்களது குடும்பத்தினர் அதிர்ந்து அடைந்துள்ளனர். இதனால், அவர் உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு அவரது டெபாசிட் தொகையில் இருந்த பணம் சாதாரண வங்கிக்கணக்கு மாற்றப்பட்டிருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், உடனடியாக வங்கி அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் புகார் அளித்துள்ளார். விசாரணையில் அன்பரசின் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட 53 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் எஸ்.டி.டி.ஆர். என்ற தனிக் கணக்கிற்கு சென்றுள்ளது. ஆனால், இந்த எஸ்.டி.டி.ஆர். கணக்கில் இருந்து வேறு கணக்கிற்கு பணத்தை மாற்ற குறைந்தது 4 மணிநேரம் காத்திருக்க வேண்டும்.
ஆனால், முன்னதாகவே காவல்துறையில் அன்பரசு புகார் அளித்த காரணத்தால், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் 16 மணிநேரத்திற்குள் அன்பரசு இழந்த 53 லட்சம் மீண்டும் அன்பரசுவின் கணக்கிற்கே கொண்டு வரப்பட்டது. மேலும், எஞ்சிய 25 ஆயிரத்தையும் மீட்க வங்கி அதிகாரிகள் காவல்துறையினருடன் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீசார் 16 மணிநேரத்திற்குள் 53 லட்சத்தை மீட்டதற்கு உயரதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.