புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார் அதில் புதுச்சேரியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்பட்டுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தந்த பகுதி கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் பகுதியில் உள்ளவர்களுக்கு தேங்காய்த்திட்டு பகுதியைச் சேர்ந்த சூர்யபிரதாப் என்பவர் கஞ்சா சப்ளை செய்வதாக தவளக்குப்பம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் தனசெல்வம் தலைமையிலான போலீஸார் சேலியமேட்டில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த சூர்ய பிரதாப்பைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் சந்தை புதுக்குப்பத்தைச் சேர்ந்த ஞானமூர்த்தி (26) என்பவர் அவருக்கு கஞ்சா விற்றது தெரியவரவே, அவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சந்தை புதுக்குப்பம் பால் சோசைட்டி வீதியில் வசிக்கும் நண்பர் நாகராஜ் (23) என்பவர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாகவும், அதிலிருந்து பறித்து கஞ்சா விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
உடனே இது பற்றி தவளக்குப்பம் போலீஸார், சம்பந்தப்பட்ட காட்டேரிக்குப்பம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மேற்குப் பகுதி எஸ்.பி. ரங்கநாதன், காட்டேரிக்குப்பம் இன்ஸ்பெக்டர் கிட்லா சத்திய நாராயணன், வேளாண் அதிகாரி வெங்கடாசலம் உள்ளிட்டோர் நாகராஜ் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது, வீட்டு முன்பு 12 அடி உயரத்துக்கு கஞ்சா செடி வளர்த்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
புதுச்சேரி : தொடர் கஞ்சா விற்பனை : சிறுவர்களே குறி.. சிக்கிய இளைஞர்கள் கைது..!
இதையடுத்து அந்த கஞ்சா செடியை போலீஸார் வெட்டி எடுத்துச் சென்றனர். இவற்றின் எடை 6 கிலோ 140 கிராம் ஆகும். இதையடுத்து ஞானமூர்த்தி, நாகராஜ் இருவரையும் கைது செய்த போலீஸார், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். வீட்டு வாசலில் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் சந்தைபுதுக்குப்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் தொடர்ந்து தமிழகம் மற்றும் ஆந்திரா பகுதிகளிலிருந்து புதுச்சேரிக்கு கஞ்சா வருவதை தடுக்க போலிசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுத்தப்பட்டுள்ளனர் என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. இதற்கான அண்டை மாநில போலீஸாருடன் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். இத்தகைய குற்றங்களை ஒடுக்கவும், முழு நேர கண்காணிப்புக்கு வசதியாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆப்ரேஷன் விடியல் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்களை அச்சுறுத்தும் செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றத்தில் ஈடுபடுவோர் மீது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள்.