நெல்லை தச்சநல்லூர் அடுத்த பால் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் பேச்சிராஜன் (26).  இவருக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டு ஆன நிலையில் தனது மனைவி மற்றும் 6 மாத கைக்குழந்தை உடன் பால்கட்டளை பகுதியில் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலைகளுக்கு தினக்கூலி அடிப்படையில் சென்று தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து வேலைக்கு சென்ற போது தச்சநல்லூர் பைபாஸ் சாலையில்  அமைந்துள்ள சாய்பாபா கோவில் முன்பு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் பேச்சி ராஜனை வழிமறித்து உள்ளனர். அவர்களிடமிருந்து பேச்சி ராஜன் தப்பி செல்ல முயன்றார், இருந்த போதிலும் அக்கும்பல் கையில் இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பியோடினர். இரத்த வெள்ளத்தில் விழுந்த பேச்சிராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதனை பார்த்த மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.




முன்னதாக சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த உறவினர்கள் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக எடுத்துச் செல்ல முயன்ற போது போலீஸாருக்கும் உயிரிழந்த பேச்சிராஜனின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  தொடர்ந்து அவரது உடலை அப்பகுதியிலேயே வைத்து தொடர்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாநகர காவல்துறை துணை ஆணையாளர்கள் ஸ்ரீனிவாசன் மற்றும் அனிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்  நடத்திய பேச்சுவார்த்தைக்கு  உடன்பட மறுத்து தொடர் போராட்டதில் ஈடுபட்ட நிலையில் போலீசார் வழுக்கட்டாயமாக உடலை கைப்பற்ற முயன்றபோது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.




அதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் பால்கட்டளை விலக்கு முன்பு உயிரிழந்த நபரின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மாநகர காவல் ஆணையாளர் அவினாஷ் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பழிக்கு பழியாக  நிகழ்ந்த கொலையா?


கடந்த 2020 ஆம் ஆண்டு பொங்கலன்று தச்ச நல்லூர் கரையிருப்பு பகுதியை சேர்ந்த மாசானமூர்த்தி என்ற இளைஞர் காணாமல் போனார்.  அவருடன் மது அருந்திய நண்பர்களை விசாரணை செய்ததில் ஒரு வாரத்திற்கு பின்பு அவர் கொலை செய்யப்பட்டு உடல் புதைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த வழக்கில் பேச்சிராஜனும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். அந்த வழக்கும் ஒரு புறம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் நிலையில் பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையை துவக்கி உள்ளனர். பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் இக்கொலை சம்பவம் அரங்கேறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.