வேலூரில் கடந்த மார்ச் 17.03.2022-ஆம் தேதி வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் மருத்துவரை ஆட்டோவில் 5 நபர்கள் கொண்ட கும்பல் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பேஸ்-II, சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் சிறார் உட்பட 1) பார்த்திபன், 2) பரத் (எ) பரத் 3)மணிகண்டன், 4) சந்தோஷ்குமார் (எ) மண்டை ஆகிய 5 நபர்களை காவல்துறையினர் அவர்களை கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் 5 நபர்கள் மீது ஏற்கனவே கடந்த 15.04.2022-ம் தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் குண்டர் தடுப்பு காவல் சட்டம் போடப்பட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கில் அறிவியல் ரீதியாக தடயங்களை சேகரித்தும் சாட்சிகளை விசாரணை செய்தும், சம்பந்தப்பட்ட எதிரிகள் மீது வேலூர் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் மொத்தம் 496 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை விசாரணை அதிகாரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரனால் தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று 23.04.2022-ம் தேதி நீதிமன்ற கோப்பிற்கு எடுக்கப்பட்ட இவ்வழக்கானது விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து வழக்கில் தொடர்புடைய எதிரிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர மாவட்ட காவல்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாக்கல் செய்யப்பட்ட 496 பக்க குற்றப்பத்திரிகையில், குற்றவாளிகள் குற்றச்சம்பவத்தில் ஈடுபடும்போது மதுபோதையில் இருந்ததாகவும், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட முயன்றபோது, பெண் மருத்துவர் ஆட்டோவுக்கு காத்திருப்பதை பார்த்து அவரை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோ சங்கர் என்பவருக்கு சொந்தமானது என்றும், அதை சங்கர் மதன் என்பவரிடம் அடமானத்துக்கு வைத்ததாகவும் அடமானம் இருந்து வந்த ஆட்டோவை மதன், குற்றவாளி பார்த்திபனுக்கு தினசரி 200 ரூபாய் வாடகைக்கு கொடுத்ததும் அந்த ஆட்டோவில்தான் பார்த்திபன் தன் கூட்டாளிகளை ஏற்றிக்கொண்டு கூட்டு பாலியல் வன்கொடுமை ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் ஆட்டோவை ஓட்டிய பார்த்திபனுக்கு முறையான ஓட்டுனர் உரிமம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், ”இவ்வழக்கு தொடர்பாக 90 நாட்களுக்கு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் நாங்கள் விரைவாக மிக குறுகிய காலத்திலேயே குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்” என்றனர்”அடுத்த கட்டமாக வரும் 30 நாட்களுக்குள் குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்று தருவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக” காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.