சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் இரவு நேரத்தில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து தொடர் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்து செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தொடர் செல்போன் பறிப்பு சம்பவம்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே ஆணைக்காரன்சத்திரம் காவல் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்களிடம் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. முக்கியமாக மாங்கனம்பட்டு ரயில்வே கேட், மயிலக்கொல்லை, காந்தி சிலை, சோதியக்குடி பைபாஸ், ஆனந்தகூத்தன் பைபாஸ் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் இந்த சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தி வந்தது.
தனியாக செல்லும் பெண்களுக்கு குறி
இரவு நேரங்களில் பணிமுடிந்து தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நோட்டமிட்டு வந்த அடையாளம் தெரியாத நபர் திடீரென அவர்களை அச்சுருத்தி செல்போன்களை பறித்து சென்றுள்ளனர். இதனால், பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகி வந்தனர். மேலும் இதுகுறித்து கடந்த ஒரு மாதத்தில் ஏராளமான புகார்கள் ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலையத்தில் பதிவானது.
மேலும் இதனை காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராத வண்ணம் அந்த பகுதிகளில் பாதுகாப்பை அதிகரித்து குற்றவாளியை கைது செய்யவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவல்துறையின் தீவிர விசாரணை
தொடர்ந்து புகாரை அடுத்து பெண்களிடத்தில் தொடர்ந்து செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடப்பதை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜா தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தனிப்படை காவலர்கள் சாமிநாதன், விஜயகுமார் உள்ளிட்டோர் கடந்த சில நாட்களாக 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வந்தனர். அந்த சிசிடிவி பதிவு காட்சிகள் மற்றும் வேறு ஆதாரங்களை வைத்து, சம்பவங்களில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடிவந்தனர்.
குற்றவாளியின் அடையாளம் மற்றும் கைது
தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் விசாரணையின் மூலம், பெண்களிடம் தொடர்ந்து செல்போன் பறிப்பு சம்பவங்களில் தாண்டவன்குளம் நவநீதக்கண்ணபுரத்தைச் சேர்ந்த 25 வயதான அருள்குமரன் என்பவர் ஈடுப்பட்டு வந்தது உறுதியானது. அதனை அடுத்து போலீசார் அவரை கண்காணித்து, அவரது இருப்பிடத்தை கண்டறிந்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு அருள் குமரனை கைது செய்தனர். மேலும் கைது செய்தபோது, விலையுயர்ந்த நான்கு செல்போன்களையும் மீட்டனர். தொடர்ந்து, அருள் குமரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
பொதுமக்களின் பாராட்டு
குறுகிய காலத்திற்குள் தீவிரமாக விசாரணை நடத்தி குற்றவாளியை விரைந்து பிடித்த ஆணைக்காரன்சத்திரம் காவல்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டுகளையும் நன்றியும் தெரிவித்தனர். பொதுமக்கள் மட்டும் அல்லாமல், செல்போனை பறிகொடுத்த பெண்களும் காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து, இனிமேல் இது போன்ற சம்பவங்கள் மறுபடியும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், இரவு நேரங்களில் பெண்கள் தனியாக செல்வதை தவிர்க்கவும், அவசியமான நேரங்களில் காவல்துறையின் உதவியை நாடவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நடைபெற்று வந்த செல்போன் பறிப்பு சம்பவம் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.