இந்த நிலையில், அண்மைகாலமாக இணையங்களிலும், பல்வேறு செயலிகள் மூலமாகவும் வேலைவாய்ப்புகள் தேடுவது எளிதாகி உள்ளது. இதனை பயன்படுத்தி சில மோசடி கும்பல்கள் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் எவ்வாறு செயல்படுவார்கள் என்று சென்னை சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். போலீசார் வழங்கிய விழிப்புணர்வுபடி, மோசடி நபர்கள் அவர்களுடைய தொடர்பு எண்ணுடன் ஃபிஷிங் மின்னஞ்சல்/குறுச்செய்திகளில் உங்களுக்கு அனுப்பலாம் அல்லது உங்களை நேரடியாக வேலைக்கு அழைக்கலாம்.
அந்த இணைய குற்றவாளிகள் தங்களை ஒரு நிறுவனமாக காட்டி கொண்டு உங்களை பணியமர்த்த அதிக ஆர்வம் காட்டுவார்கள். பின்னர், மோசடி நபர்கள் தங்களை உயர் அதிகாரியாக கூறிக்கொண்டு குறுகிய கால வேலை வழங்கி அதற்கு அதிக ஊதியம் வழங்குவதாக கூறி வேலை தேடுபவரை சிக்க வைக்க முயற்சி செய்வார்கள்.
வேலைதேடுபவருக்கு போலி அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை அனுப்புவர். பின்னர், வேலை தேடுபவரிடம் தங்களை பதிவு செய்வதற்கு அல்லது இணையம் மூலமாகவே பயிற்சி வழங்குவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி பணம் கேட்பார்கள். மேலும், வங்கியில் சம்பளக் கணக்கை உருவாக்க வேண்டும் எனக் கூறி அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஒரு தொகையை கேட்பார்கள்.
அவர்களிடம் சிக்கும் பொதுமக்கள் யோசிக்காமல் இருப்பதை தடுப்பதற்கு, கட்டணத்தை செலுத்த குறைந்த கால அவகாசமே இருப்பதாகவும், அதைவிட்டால் வேலைவாய்ப்பு வேறு ஒருவருக்கு சென்று விடும் என்றும் சொல்வார்கள்.
தங்களுக்கு வேலையாக டேட்டா என்ட்ரி பணியை வழங்குவார்கள்¸பணி முடித்து சமர்ப்பித்த பின்னர் தங்களது சம்பளம் வழங்க சேவைக் கட்டணம்/வரியாக ஒரு குறிப்பிட்ட தொகையினை செலுத்த கூறுவர். மேலும் தங்களிடம் நிதி மோசடி செய்ய உங்களது தனிப்பட்ட விவரங்களான பான் எண்/ஆதார் எண்/வங்கி கணக்கு எண் போன்றவற்றை சேகரிக்கவும் முயற்சி செய்வார்கள். இணையவழி மோசடி கும்பல்களின் இதுபோன்ற செயல்களினால் வேலை தேடுபவர்கள் தங்களது பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை இழக்க நேரிடும்.
இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் இருந்து தப்பிப்பதற்கு, இணைய குற்றவாளிகள் அனுப்பும் போலியான வேலை வழங்கு மின்னஞ்சல் (பொதுவாக அதிகார பூர்வ மின்னஞ்சல் தவிர்த்து)/ குறுஞ்செய்திகளில் எழுத்துப்பிழைகள் மற்றும் இலக்கண பிழைகள் காணப்படும். மேலும் இதுபோன்ற மொத்தமாக அனுப்பப்படுவதால் இம்மின்னஞ்சல்கள் உங்களது ஸ்பேம் பகுதியில் காணப்படும். ஒருபோதும் இதுப்போன்ற மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டாம்.
தங்களுக்கு வேலை வழங்குவதாக கூறும் நிறுவனம் வேலை விண்ணப்பத்திற்கு பணம் செலுத்த கூறினால் அது ஒரு மோசடி நிறுவனமாக இருக்க வாய்ப்பு உண்டு. எனவே மேற்கொண்டு அம்மின்னஞ்சலுக்கு பதிலளிக்க வேண்டாம். தங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறும் நிறுவனத்தை நேரடியாக தொடர்பு கொண்டு உங்களது வேலையின் உறுதி தன்மையினை தெரிந்துக்கொள்ளலாம்.
எப்போதும். யாருக்கும் உங்களது தனிப்பட்ட தகவல்கள் அல்லது நிதிச்சார்ந்த தகவல்களை மின்னஞ்சல்¸ குறுஞ்செய்தி அல்லது தொலைப்பேசியின் வாயிலாக பகிர வேண்டாம். மேற்சொன்ன மோசடியில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் பின்வரும் https://cybercrime.gov.in என்ற இணைதளத்தில் புகார் அளிக்கவும். என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.