கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிராம ஊர் கவுண்டர் தலைமையில் நடைபெறும் கட்டபஞ்சாயத்து சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதில் கணவரை இழந்த பெண் உட்பட பலர் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என வேதனையுடன் தெரிவிக்கும் விவசாயிகள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ளது மாரண்டப்பள்ளி கிராமம் இந்த கிராமத்தில்தான் தொடர்ந்து ஊர் கவுண்டர் தலைமையில் கட்டப்பஞ்சாயத்து நடைபெற்று வருவது வாடிக்கையாக உள்ளது. கட்டப்பஞ்சாயத்தில் கணவரை இழந்த பெண் உட்பட பலர் இந்த வேதனையை அனுபவித்து வருகின்றனர். கட்டப்பஞ்சாயத்தால் ஊரைவிட்டு தள்ளி வைத்துள்ளதாக தெரிவித்து அவர்களுக்கு கடைகளில் பொருட்கள் வாங்கவோ அல்லது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் கூடாது என எச்சரிக்கை விடுக்கும் ஊர் கவுண்டர் மேலும் பண்டிகை காலங்களில் தொடர்பு கொள்ளக்கூடாது எனவும் தீர்ப்பு வழங்கி அவ்வாறு தொடர்பு கொண்டால் அபராத பணம் கட்ட சொல்லி வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.


 




 


 


கட்டப்பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்ட கணவரை இழந்த பெண் கிருஷ்ணவேணி தெரிவிக்கையில்;


பெங்களுரில் நான் இருந்தபோது 13வருடங்களுக்கு முன்பு என்னுடைய கணவர் மாரடைப்பால் இறந்தவிட்டார். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் தங்கள் குடும்ப சொத்தான விவசாயத்தை பராமரிக்க வந்தபோது கணவரின் அண்ணார் சின்ன பையன் என்பவருக்கும் எங்களுக்கும் நிலத்தில் உள்ள தென்னைமரம் சம்பந்தமாக வாய்த்தகராறு ஏற்பட்டது. இது சம்பந்தமாக ஊர் கவுண்டர் சந்திரன் மற்றும் சிலர் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டனர். அப்போது உடன்பாடு ஏற்படாததால் நான் சூளகிரி காவல் நிலையம் சென்றேன். நாங்கள் இருக்கும் போது காவல் நிலையத்திற்கு எதற்கு சென்றாய் என தகாத வார்த்தையில் பேசியதோடு அப்போதிலிருந்து தற்போது வரை தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதோடு ஊரைவிட்டு தள்ளி வைத்துள்ளனர். என்னுடைய தோட்டத்திற்கு வரும் வேலையாட்களையும் பணி செய்ய விடாமல் தடுத்து அவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் முதல் 10ஆயிரம் வரை அபராதம் விதித்து வருகின்றனர் என வேதனையுடன் தெரிவித்தார். 


 




 


இதேபோல் பாதிக்கப்பட்ட மற்றொரு விவசாயி சங்கரன் மகள் வேறு ஜாதி பையனுடன் திருமணம் செய்து கொண்டதால் அந்தக் குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும் பெண்ணிடம் தொடர்பு கொள்ளக் கூடாது எனவும் ஊர் கவுண்டர் நிபந்தனை விதித்து அவருக்கு ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் கட்ட சொல்லி வற்புறுத்தியுள்ளார். மேலும் அவருடைய மனைவியையும் கூலி வேலை செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதேபோல் விவசாயி கிருஷ்ணன் மற்றும் கோவில் பூசாரியும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளார் ஊர்கவுண்டர். இதுபோல் தொடரும் அந்த கிராமத்தில் கட்டப்பஞ்சாயத்து சம்பவம் தொடர்பாக சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினால் கட்டப்பஞ்சாயத்து எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்து ஊர் கவுண்டர் சந்திரன் மற்றும் சிலர் சென்று விடுகிறார்கள்.இந்த கட்டபஞ்சாயத்து தற்போது 5க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே சம்பந்தபட்ட ஊர்கவுண்டர் அவருக்கு உறுதுணையாக செயல்படும் நபர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.