தருமபுரி பகுதியில் கஞ்சா விற்றதாக இரண்டு பேரை நகர காவல் துறையினர் கைது செய்து, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு தருமபுரி மாவட்ட காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி நகர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தருமபுரி நகர காவல் துறையினர் தருமபுரி கோல்டன் தெரு, எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தனித்தனி குழுவாக தீவிர சோதனை நடத்தினார். அப்பொழுது தருமபுரி பேருந்து நிலையம் அருகே உள்ள கோல்டன் தெருவை சேர்ந்த கவியரசு என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்பொழுது அவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கவியரசிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவினை காவல் துறையினர் கைது பறிமுதல் செய்து, கவியரசை கைது செய்தனர்.
இதே போல் தருமபுரி எம்ஜிஆர் நகரில் உள்ள மணிகண்டன் என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது காவல் துறையினர் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மணிகண்டனை தருமபுரி நகர காவல் துறையினர் கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை அவரிடமிருந்து பதிவு பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை தடுக்கும் பணியில் தருமபுரி நகர காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தருமபுரி மாவட்டத்தில் தினமும் கஞ்சா விற்பனை செய்தவர்கள் அதிரடியாக காவல் துறையினர் கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் துறை சார்பில் துணை கண்காணிப்பாளர் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி போதை வஸ்த்துகளை உபயோகித்து வருகின்றனர். அதனால் சமூதாயத்தில் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபடுவதும், சிறுவயதிலேயே உயிரிழப்பதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் சட்டவிரோத ஆன்லைன் விளையாட்டில் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபடுவதால் பணயிழப்பும், தற்கொலைகள் போன்றவைகளும் அதிகளவில் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அதனடிப்படையில் தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பில் இந்த மாதிரியான போதை பொருட்களை பயன்படத்தும் இளைஞர்களை நல்வழிபடுத்தும் வகையில் துணை கண்காணிப்பாளர் வினோத் தலைமையில் நகர காவல் ஆய்வாளர் நவாஸ் மற்றும் காவல் துறையினர் தருமபுரி நகர பகுதி குமாரசாமிபேட்டை, அன்னசாகரம், பாரதிபுரம், அம்பேத்கர் காலனி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட தெருக்களிலும், அதே போல் சவுளூர், அ.கொல்லபட்டி, வேடியப்பன் திட்டு, அதியமான் கோட்டை, ஒட்டப்பட்டி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேரடியாக சென்று பொது மக்களை சந்தித்து, அவர்களது பிள்ளைகளுக்கு இருசக்கர வாகனங்களை ஓட்டவோ, சொந்தமாக வாங்கி கொடுக்கவோ கூடாது என்றும், அதே போல் எப்பொழுதும் தங்களது பிள்ளைகளை பெற்றோர்களின் கண்காணிப்பில் இருக்கும்படி வைத்து கொள்ள வேண்டும். சிறுவர்களுக்கு ஸ்புக், சோசியல் மீடியாவை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்றும், தற்போது இளைஞர்கள் மதுவுக்கும், போதை பொருட்களுக்கு அடிமையாகி சிறு வயதிலேயே சீரழிந்து வருவது அதிகரித்துள்ளது. அதனால் தங்களது பிள்ளைகளை கவனிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் அப்பகுதியில் உள்ள பெண்களிடம், வெளியே செல்லும் போது அதிக நகைகளை அணிந்து செல்ல வேண்டாம் என்றும், தங்களது தெருக்களில் சிசிடிவி கேமரா பொருத்தினால் திருடர்கள் கூட வர பயப்படுவார்கள் என்றும் பொது மக்களிடம் வேண்டுகோள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.