"மாவட்ட ஆட்சியராக பணிபுரிகிறேன் எனக்கூறி, 80 லட்சம் ஏமாற்றிய பெண்ணை வேலூர் மாவட்ட போலீசார் கைது செய்தனர்"
மாணவிக்கு உதவிய பேராசிரியர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிளாடிஸ் குணா (24). குணா கடந்த 2021 ஆம் ஆண்டு வேலூர் ஊரிசு கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்துள்ளார். இதனை தொடர்ந்து அக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த சதீஷ்குமாரிடம் (42) தனது கனவுக்கு உதவுமாறு கேட்டுள்ளார். அதாவது தன்னுடைய கனவு ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் எனவும், தனக்கு புற்றுநோய் இருப்பதாகவும் கூறி பேராசிரியர் சதீஷ்குமாரிடமிருந்து அவ்வப்போது படிப்பு செலவுக்காகவும், மருத்துவச் செலவுக்காகவும் பலமுறை பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
80 லட்சம் ரூபாய் வரை நிதி பெற்ற மாணவி
மாணவியின் பேச்சை நம்பிய பேராசிரியர் சதீஷ்குமார் மாணவிக்கு அவ்வப்போது சிறகு சிறுக பணம் கொடுத்து வந்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் இதுவரை 16 லட்ச ரூபாய் கொடுத்ததாக சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து whatsapp குழு மூலம் நிதி திரட்டி 54 லட்ச ரூபாய் குணாவின் வங்கி கணக்கிற்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் பல்வேறு இடங்களில் விளம்பரம் மூலமாகவும், குணாவிற்கு 10 லட்சம் ரூபாய் நிதி கிடைத்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு ஜூலை வரை, மொத்தம் அவரது வங்கி கணக்கு 80 லட்சம் வரை பல்வேறு வகையில் பண பரிமாற்றம் நடைபெற்று உள்ளது.
கலெக்டராக பணி புரிவதாக தகவல்
இந்தநிலையில் சதீஷ்குமார் உடல்நிலை எப்படி இருக்கிறது ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டாயா, என குணாவிடம் அவ்வப்போது கேட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சதீஷ்குமார் தொடர்ந்து கேட்டு வந்ததால் உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் தற்போது பயிற்சியில் இருப்பதாக கூறி ஒரு அடையாள அட்டையை அனுப்பி வைத்துள்ளார்.
குணா அனுப்பிய அடையாள அட்டை மீது சதீஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது நண்பர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் இந்த அடையாள அட்டை புகைப்படத்தை அனுப்பி வைத்து விசாரித்துள்ளார். சதீஷ்குமார் விசாரத்துதலில் அந்த அடையாள அட்டை போலி என தெரியவந்தது.
ஏமாற்று ராணியை கைது செய்த போலீஸ்
இதனைத் தொடர்ந்து குணா பொய் சொல்லி தன்னிடம் இருந்தும் மற்றும் பலரிடமிருந்து whatsapp மூலமாகவும் ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு சதீஷ்குமார் புகார் அளித்தார். புகாரி அடிப்படையில் குணா மோசடியில் ஈடுபட்டதை காவல்துறையினர் உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் குணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.