இன்று முதல் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலம் டிக்கெட்டுகளை (General Reserved Tickets) முன்பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயம் என இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது ரயில் டிக்கெட் முன்பதிவு செயல்பாட்டில் சில முக்கிய மாற்றங்கள் வர உள்ளன. இது குறித்த தகவல்களை பின்வருமாறு,
முன்பதிவுகள் திறந்த முதல் 15 நிமிடங்களுக்கு, ஆதாருடன் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகளைக் கொண்ட பயணிகள் மட்டுமே ஐஆர்சிடிசி வலைதளம் அல்லது செயலியில் டிக்கெட்டுகளை முன்பு செய்ய முடியும். குறிப்பாக ரயில் டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி அதிக விலைக்கு விற்கும் இடைத்தரகர்களைத் தடுக்கும் வகையில் இந்த புதிய விதிகள் கொண்டுவரப்படுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ரயில்வே சுற்றறிக்கையில், டிக்கெட் முன்பதிவின் நன்மைகள் அனைவரையும் சென்றடைய வேண்டும். இதை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய, புதிய விதிகள் கொண்டுவரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனர்கள் மட்டுமே முதல் 15 நிமிடங்கள் பொது முன்பதிவு டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும் என்று கூறப்பட்டது. பின்பு இந்த விதிகள் தட்கல் முன்பதிவுகளுக்கு ஏற்கனவே உள்ள காட்டுப்பாடுகளைப் போலவே அமைந்துள்ளது.
அக்டோபர் 1 முதல் ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகள் மட்டுமே முதல் 15 நிமிடங்களுக்கு பொது முன்பதிவு டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும். உதாரணமாக முன்பதிவு காலை 10 மணிக்கு திறந்தால், ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டும் காலை 10 மணி முதல் காலை 10.15 மணி வரை முன்பதிவு செய்ய முடியும். அந்த 15 நிமிடங்களுக்குப் பிறகு IRCTC கணக்கு உள்ள எவரும் வழக்கம் போல் முன்பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் நேரடி கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது ஆதார் இல்லாமல் ரயில்வே கவுன்ட்டர்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையை இணைப்பது போலி கணக்குகள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதைத் தடுக்க உதவும், அதிக விலைக்கு டிக்கெட்டுகளை வாங்கி விற்கும் தரகர்களைத் தடுக்கும் வகையில் தான் இந்த விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. முன்பு கூறியதை போல் இந்த விதிகள் ஏற்கனவே தட்கல் முன்பதிவுகளில் உள்ளது. இப்போது இந்த விதி பொது முன்பதிவுகளுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகவே முதல் 15 நிமிடங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய உங்கள் ஆதாரை உங்கள் IRCTC கணக்குடன் இணைக்க வேண்டும்.
ஆதாரை இணைக்க வேண்டுமென்றால் ஐஆர்சிடிசி வலைத்தளம் அல்லது செயலியில் நுழையவும். அடுத்து மை ப்ரொபைல் பகுதிக்குச் செல்லவும். அதன்பின்னர் ஆதார் அங்கீகாரம் (Aadhaar Authentication) என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும். உங்கள் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓடிபி வரும் அதை இங்கு உள்ளிட்டு சரிபார்க்கவும். உங்கள் ஐஆர்சிடிசி கணக்கு விவரங்கள் (பெயர், மொபைல் எண் போன்றவை) ஆதாருடன் பொருந்துகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.