காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் மாடவீதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் ஸ்ரீபிராப்பர்ட்டி என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார். காஞ்சிபுரம் வையாவூர் மற்றும் சிறுவள்ளூர் போன்ற பகுதிகளில் வீட்டு மனை அளிப்பதாக கூறி தலா ஒரு நபரிடம் 56 ஆயிரம் ரூபாய் வசூல் செய்தார். குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 56 ஆயிரம் ரூபாய் பணம் கட்டினால் போதும், அவர்களுக்கு அரை கிரவுண்ட் நிலம் அளிப்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நடுத்தர மற்றும் ஏழ்மை நிலையில், உள்ளவர்கள் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையில் ஸ்ரீதரை நம்பி ஏராளமானோர் பணம் கட்டினர்.



தன் மீது நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக சிலருக்கு மட்டும் வீட்டுமனை கொடுப்பதைப் போல் பாவ்லா செய்துள்ளார். இதனை நம்பி ஏராளமானோர் ஸ்ரீதரிடம் பணம் கட்டினர் . குலுக்கல் முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். பணம் கட்டிய அனைத்து நபர்களுக்கும் அவர்கள் நம்புவதற்காக பாண்டு பத்திரத்தில் கையொப்பமிட்டு அளித்துள்ளார். பொது மக்களுக்கு வீட்டுமனை அளிப்பதாக கூறி சுமார் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்ததாலும் நாட்கள் செல்ல செல்ல வீட்டுமனையும் அளிக்காமல் பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றியதாலும் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட குற்றப்பிரிவி துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி தலைமையில் விரிவான விசாரணை செய்யப்பட்டது.



சுமார் 500 க்கும் மேற்பட்ட நபர்களை ஸ்ரீதர் ஏமாற்றி உள்ளது தெரியவந்தது . அதன்பேரில் காஞ்சிபுரத்தில் புத்தேரி தெருவில் பதுங்கி இருந்த ஸ்ரீதரை குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் பாபு தலைமையில் உதவி ஆய்வாளர் ராமன் , சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமை காவலர் சௌந்தரராஜன் ஆகியோர் அதிரடியாக சென்று தலைமறைவாக இருந்த ஸ்ரீதரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.

 

இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதரிடமிருந்து பறிகொடுத்த பணத்தை மீட்டு ஒப்படைக்க கோரியும், மேலும் முக்கிய குற்றவாளியான ராஜாவை கைது செய்ய கோரியும் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் உடன் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். திடீரென அதிகளவில் கூட்டம் கூடியதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.




இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஜெயலட்சுமி என்பவர் கூறுகையில், ‛நிலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் அவர் கொடுத்த கவர்ச்சிகரமான வாக்குறுதி மற்றும் விளம்பரங்களை நம்பி தான் பணம் கட்டினேன் ஆனால் முழு தொகையும் கட்டிய பிறகும் நிலங்களை ஒதுக்காமல் ஏமாற்றிவிட்டார், அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் .  கவர்ச்சிகரமான விளம்பரங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் நன்கு ஆராய்ந்த பிறகு முதலீடு செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.