நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்ற கிறிஸ்தவ மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடியை தாக்கி பேசியும், சாதி மற்றும் மதரீதியில் கலவரங்களை தூண்டும் வகையில் பேசினார். சமூக வலைதளங்களில் பரவிய அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்ததுடன் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தது. மேலும், அவர் மீது கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பினர் புகார் அளித்திருந்தனர். தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கோரி ஜார்ஜ் பொன்னையா வீடியோ வெளியிட்டிருந்தார். இருப்பினும் காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்கு பயந்து, அவர் தலைமறைவானார். இந்த நிலையில், தலைமறைவாகிய அவரை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.
முன்னதாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை அருமனை பகுதியில் இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். மற்றும் மத்திய அரசு செயல்படுவதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்தவ, இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் மதபோதகர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பனைவிளை பங்குதந்தையான போதகர் ஜார்ஜ் பொன்னையாவும் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசும்போது, தமிழகத்தில் தி.மு.க. வெற்றி பெற்றது சிறுபான்மையினர் போட்ட பிச்சை. மண்டை காடு கோயில் தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் இந்து அறநிலைய துறை அமைச்சரான சேகர்பாபு , தகவல்தொழில்நுட்பதுறை அமைச்சர் மனோ தங்கராஜ் , சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் பிச்சைகாரர்களை போல மேலாடை அணியாமல் கோயில் கோயிலாக சுற்றினர். நாம் சர்ச்க்கு போகும்போது கோட்டை அணிந்து டிப்டாப்பாக செல்கிறோம்.
மண்டைகாடு அம்மன், சுசீந்தர் உட்பட இந்து கோயில்களை இழிவுபடுத்தி வகையில் பேசியதுடன், குமரி மாவட்டத்தில் 70 சதவீத கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்று விட்டு இந்து கோயில்களுக்கு நாள்தோறும் சென்று கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள். நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி இரண்டாயிரம் வீதம் கொடுத்து கிறிஸ்தவ நாடார் ஓட்டை வாங்கி வெற்றி பெற்றார். அவர் பாரத தாயை மதித்து செருப்பு அணியமாட்டார். நாமோ பாரத தாயின் மேல் இருக்கும் அசிங்கம், சொறி, சிரங்கு பரவாமல் நம்மேல் படக்கூடாது என்பதற்காக ஷூ போடுகிறோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இதுமட்டுமின்றி அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமிர்ஷா மற்றும் பிரதமர் மோடியையும் அவதூறாக பேசினார். மேலும், மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.ஓ. உட்பட அரசு அதிகாரிகள் குறித்து இப்படி சர்சைக்குரிய வகையிலும் சாதி மற்றும் மதங்களை தாக்கியும் பேசினார். அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதையடுத்து, காவல் நிலையங்களில் அவர் மீது பதியப்பட்ட 7 வழக்குகளின் கீழ் அவர் இன்று மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தீவுக்கு தப்பிச்செல்கிறார் என்றெல்லாம் அவர் பற்றிய செய்திகள் வெளியான நிலையில், தலைமறைவாக இருந்த மதபோதகரை போலீசார் மதுரையில் பிடித்தனர்.