மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள பூம்புகார் மருதம்பள்ளம் பகுதியில் நடத்தப்பட்ட காவல்துறையினரின் வாகன சோதனையின்போது, சரக்கு வாகனத்தில் தனி அறைகள் அமைத்து புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட 400 மது பாட்டில்கள் மற்றும் 110 லிட்டர் பாண்டி சாராயத்தை மத்திய நுண்ணறிவுப் பிரிவு மற்றும் சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவர் தலைமறைவாகி உள்ளனர்.

Continues below advertisement

எஸ்.பி.உத்தரவு

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் சட்டவிரோத செயல்களைத் தடுக்கவும், கடத்தல் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும் போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, புதுச்சேரியின் ஒரு பகுதியான காரைக்காலில் இருந்து தமிழ்நாட்டிற்கு சட்டவிரோதமாக மதுபானங்கள் மற்றும் சாராயம் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், பூம்புகார் - மருதம்பள்ளம் பகுதியில் மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீசார் மற்றும் சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இணைந்து சிறப்பு வாகன சோதனையை மேற்கொண்டனர்.

Continues below advertisement

அதிவேகமாக வந்த வாகனம்

அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை போலீசார் நிறுத்த முயன்றனர். அப்போது, வாகனத்தின் உள்ளே இருந்தவர்களில் ஒருவர் திடீரென கீழே குதித்து, அருகிலிருந்த காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடினார். இதனை கண்டு சுதாரித்துக்கொண்ட போலீசார், வாகனத்தை ஓட்டி வந்த நபரையும், உடன் இருந்த மற்றொருவரையும் மடக்கிப் பிடித்தனர்.

கண்டறியப்பட்ட ரகசிய அறைகள் 

பிடிபட்ட நபர்களிடம் போலீசார் நடத்திய முதல் விசாரணையில், பூம்புகாரைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன் மற்றும் ஜெகன்வளவன் என்பது தெரியவந்தது. அவர்களின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தவே, போலீசார் அந்த சரக்கு வாகனத்தை முழுமையாக சோதனை செய்தனர். அப்போது, வாகனத்தின் என்ஜின் பகுதியிலும், அதன் அடிப்பகுதியிலும் ரகசியமாக தனி அறைகள் அமைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த அறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான மதுபாட்டில்கள் மற்றும் சாராய கேன்கள் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்டவை

சோதனையின் முடிவில், காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட 400 மதுபாட்டில்கள் மற்றும் 110 லிட்டர் பாண்டி சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

விசாரணை மற்றும் கைது

பிடிபட்ட செந்தமிழ்ச்செல்வன் மற்றும் ஜெகன்வளவன் ஆகிய இருவரிடமும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், தப்பி ஓடிய நபர் தருமகுளம் பகுதியைச் சேர்ந்த அகோரம் என்பதும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட அந்த சரக்கு வாகனம் அகோரத்தின் மனைவி சத்யாவிற்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. சட்டவிரோத மதுக்கடத்தலில் ஈடுபட்ட இந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

தலைமறைவானவர்களுக்குச்வலைவீச்சு

இந்தச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளான அகோரம் மற்றும் அவரது மனைவி சத்யாவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர்கள் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம்

சட்டவிரோத மதுக்கடத்தல் மற்றும் சாராய விற்பனை, இளைஞர்கள் மற்றும் குடும்பங்களின் எதிர்காலத்தை கடுமையாகப் பாதிக்கிறது. இதுபோன்ற கடத்தல்கள், போதைப் பழக்கத்தை அதிகரிப்பதோடு, சமூகத்தில் பல்வேறு குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது. இதுபோன்ற கடத்தல் கும்பல்களை முற்றிலும் ஒழிக்க, பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமானதாகும்.

காவல்துறையின் வேண்டுகோள் 

இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் குறித்து தகவல் தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், தகவல் கொடுப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், வருங்காலங்களில் இதுபோன்ற கடத்தல்களை முறியடிக்க, கண்காணிப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.