ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கு பாகிஸ்தானை வென்றதன் மூலம் மிகப்பெரிய ஊக்கத்தை அளித்திருக்கிறது. வரலாற்றை திரும்பி பார்க்க வைத்திருக்கும் மகத்தான வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்க செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்களை சேர்த்தது. இந்த அணியின் கேப்டன் ஹோப் அதிகபட்சமாக 120 ரன்கள் குவித்தார்.
அதன் பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சிற்கு தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை பரிகொடுத்து 92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்திருந்தாலும், தொடர்ச்சியாக அடுத்த 2 ஆட்டங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணியை தோற்கடித்திருக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் 34 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணி அசத்தியுள்ளது. தொடரை கைப்பற்றிய மகிழ்ச்சியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடினர். மேலும், சக வீரர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டும், மைதானம் முழுக்கு சுற்றி வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் கொண்டாட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 34 ஆண்டு கால ஏக்கம் மட்டும் அல்லாமல் தொடர் தோல்வியில் இருந்த வீரர்களுக்கு புத்துணர்ச்சியையும் அளித்திருக்கிறது.