ஒவ்வொரு நாளும் தனிப்படையின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய, அடுத்தடுத்த போலீசார் எடுத்து வரும் வியூகம், இதுவரை கையில் பலன் தரவில்லை. ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக, விருதுநகர் குற்றப்பிரிவுக்கு வந்த புகாரின் தொடர்ச்சியாக, ராஜேந்திரபாலாஜியை தேடும் பணி கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.
அவரது முன்ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற முயற்சித்து வருகிறார் ராஜேந்திரபாலாஜி. ஆனால் அவர் எங்கு இருக்கிறார், என்பதற்காக விடை இதுவரை தெரியவில்லை. ராஜேந்திரபாலாஜியை கடல் பகுதியில் தேடுவதாக கூறினார்கள். பின்னர் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான ஊர்களில் இருப்பதாக கூறினார்கள். அதன் பின், பெங்களூருவில் இருப்பதாக கூறினார்கள்.
கார் விட்டு கார், ஊர் விட்டு ஊர் என ராஜேந்திரபாலாஜி அடுத்தடுத்து இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார் என்று கூறினார்கள். இதுவரை எந்த ஊரில் இருக்கிறார், என்ன ஆனார் என்பது தெரியவில்லை. ராஜேந்திரபாலாஜியை தேடி இதுவரை 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அனைத்து தனிப்படைக்கும் தண்ணி காட்டி, எஸ்கேப் ஆகி வருகிறார் அவர்.
இந்நிலையில் தான் அவர் இங்கு தான் உள்ளாரா... இல்லை வேறு ஏதாவது நாட்டிற்கு சென்று விட்டாரா என்கிற அளவிற்கு போலீசாரின் தேடுதல் வேட்டையில் பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இப்படி தான் நித்தியானந்தாவை போலீசார் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றனர். அவர் ஒரு நாட்டின் அதிபராகவே தன்னை அறிவித்துக் கொண்டார். செயல்பட்டும் வருகிறார்.
அந்த வரிசையில் ராஜேந்திரபாலாஜியும் தற்போது மறைமுகமாகிவிட்டாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. எந்நிலையிலும் கைதாகிவிடக்கூடாது என்பதில் ராஜேந்திரபாலாஜி உறுதியாக உள்ளார். முன்ஜாமின் பெற்று, வழக்கம் போல ஊரில் கெத்தாக வலம் வர வேண்டும். வழக்கை சட்டப்படி சந்திக்க வேண்டும் என்பதில் தான் அவர் குறியாக உள்ளார் என தெரிகிறது. அது அவரது குறிக்கோள் என்றால், போலீசாருக்கு அவரை பிடிக்க வேண்டும், கைது செய்ய வேண்டும், ஒருநாளாவது சிறையில் வைக்க வேண்டும் என்கிற வெறியோடு தேடிவருகின்றனர்.
ஆனால் அதற்கு இதுவரை கைமேல் பலன் கிடைக்கவில்லை. போலீசார் இன்னும் தேடாத ஒரே இடம், ஆகாய மார்க்கம் தான். இன்னும் சில தனிப்படைகள் அமைத்து, அங்கும் தேட வாய்ப்புண்டு என கிண்டல் அடிக்கின்றனர் ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளர்கள். ‛சில்வண்டு சிக்கும்... சிறுத்தை சிக்காதுப்பு...’ என்று மார் தட்டிக் கொள்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்