சிவகங்கையில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகித்துப் பேசினார்.
மக்கள் மனதை கொள்ளையடிக்கிறோம்:
அப்போது, ”நாங்கள் தி.மு.க.வைப் போல கொள்ளையடிக்கவில்லை. மக்களின் மனதை கொள்ளை கொண்டு, முன்னேறியுள்ளோம். எங்கள் மீது தி.மு.கவினர் எத்தனை வழக்குகளைப் போட்டாலும், அத்தனை வழக்குகளையும் அவற்றையெல்லாம் சந்திப்போம். இன்று தமிழகத்தில் கொலை கொள்ளை ஆட்சி நடக்கிறது. இதனை மக்களிடம் சென்று சொல்லிவிடுவோம் என்கிற பயத்தில் நமது கூட்டத்தை நடத்த விடாமல் தடுத்து வருகின்றனர்.
தி.மு.க. பி. டீம் ஒன்று உள்ளது. இதய தெய்வம் அம்மா பிறந்த நாள் என்பதை கூட அறியாதவர்கள், எங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். பி. டீமை வைத்துக்கொண்டு அண்ணா திராவிட கழகத்தை முடக்கிவிட நினைத்தால் முடியாது. பீ. டீமை வைத்துக் கொண்டு எங்களுக்கு இடையூறு அளிக்க நினைத்தால், எதிர்காலத்தில் தி.மு.க இல்லாத நிலை ஏற்படும்.
முடங்கிய படங்கள்:
தி.மு.க. ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதில் சேர்மன் ஆக ஸ்டாலின் உள்ளார். இயக்குனர்களாக அமைச்சர் உதயநிதியும், கனிமொழியும் செயல்படுகிறார்கள். எனவே தமிழகத்தை ஒரு கார்ப்பரேட் கம்பெனிதான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அதனால் தான் மக்களுக்கு இந்த ஆட்சியால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
தி.மு.க ஆட்சியில் ஸ்டாலின் அவரது மகனை அமைச்சராக்கியதே மிகப்பெரிய சாதனை. உதயநிதி ஸ்டாலினால் 150 படங்கள் முடங்கியுள்ளது.
சினிமா படங்களை எல்லாம் குறைந்த விலைக்கு கேட்டதால் 150 படங்கள் பெட்டிக்குள் தூங்குகின்றன. அரசியலிலும் சம்பாதிக்கின்றனர். சினிமாவிலும் சம்பாதிக்கின்றனர். கடலில் 300 அடி தூரத்தில் ரூ.81 கோடி மதிப்பீட்டில் பேனா சிலை வைப்பது அவசியமா? அண்ணா அறிவாலயத்திலேயோ, கலைஞர் நினைவிடத்திலையோ, சிறிய அளவில் பேனா சிலை வைத்துவிட்டு, எழுதும் பேனாக்களை மாணவர்களுக்கு வழங்கலாமே? தற்போது எந்தத் திட்டமாக இருந்தாலும் அமைச்சர் உதயநிதிதான் அடிக்கல் நாட்டுகிறார். ஏன் கட்சியில் மூத்த அமைச்சர்கள் யாருமே இல்லையா? அரச பரம்பரையா?
அ.தி.மு.க. தொண்டர்கள் கட்சி:
ஸ்டாலின், அவருக்கு பின் அவரது மகன் என தொடர வேண்டுமா? தி.மு.க போல் குடும்ப கட்சியல்ல அ.தி.மு.க. யார் வேண்டுமானாலும் கடுமையாக உழைத்தால் தொண்டர்கள் கூட உயர்ந்த பதவியை அடையலாம். ஸ்டாலின் அவர்களே நீங்கள் தலைவராக இருந்து பார்க்கிறீர்கள் நான் தொண்டனாக இருந்து பார்க்கிறேன். தொண்டன் என்பதே ஒரு கட்சியை காக்க முடியும். தொண்டன் தான் ஒரு கட்சியின் உயிர்மூச்சு. அ.தி.மு.க என்பது தொண்டர்களால் ஆன கட்சி.
மக்கள் கோரிக்கை:
எதிர்க்கட்சி கோரிக்கை வைக்கவில்லை,நாட்டு மக்கள் கோரிக்கை வைக்கவில்லை ஆனால், ஏழை எளிய மாணவர்கள் எம்.பி.பி.எஸ் பயில என் மனதில் உதித்ததே 7.5 சதவீத திட்டம். உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சரை அழைத்து அதனை செயல்படுத்தினேன். அது மட்டுமில்லாமல் அதனடிப்படையில் பயிலும் மாணவர்களின் செலவுகளை அரசே ஏற்கும் என்று அறிவித்தோம்.
தி.மு.க ஆட்சியில் மகளிருக்கு இலவச பேருந்து என அறிவித்தார்கள். ஆனால், அந்த பேருந்துகளின் நிலை மிகவும் மோசம். பேருந்துகளை தனியார் மயமாக்க போகிறார்கள் எனத் தகவல் வருகிறது. அதை என்ன செய்யபோகிறார்கள் எனத் தெரியவில்லை. முதியோர் உதவி தொகை அதிகமாக வழங்கப்பட்டது அ.தி.மு.க ஆட்சியில் ஆனால் திமுக ஆட்சியில் 7 லட்சம் பேருக்கு உதவி தொகையை நிறுத்தியுள்ளார்கள். அ.தி.மு.க ஆட்சியில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கினோம்.
பொம்மை முதலமைச்சர்:
நான் ஒரு விவசாயி என்பதால் அனைத்து விவசாயிகளுக்கும் முழு நேர மும்முனை மின்சாரம் வழங்கினோம். ஆனால் இந்த ஆட்சியில் பகுதி நேர மின்சாரம் மட்டுமே வழங்கப்படுகிறது. மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளது. நீர் நிலைகள் அனைத்திலும் நீர் உள்ளது. ஆனால், அதனை பயன்படுத்த மின்சாரம் இல்லை. இதனை கண்டுகொள்ளாமல் ஒரு பொம்மை முதலமைச்சராக உள்ளார். 12,110 கோடியை தள்ளுபடி செய்தோம். ஆனால் இந்த ஆட்சியில் ஒரு கடனும் தள்ளுபடி என்பது இல்லை விவசாயிகளுக்கு.
இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகள் அ.தி.மு க ஆட்சியிலிருந்தால் இந்நேரம் இந்த வறட்சியான சிவகங்கை மாவட்டம் பசுமையாக காட்சியளிக்கும். அண்ணா, எம்.ஜி.ஆருக்கு குழந்தை கிடையாது. இவர்கள் அனைவருக்கும் குழந்தை நாம்தான். தி.மு.க தலைவருக்கும் எனக்கும் ஒரு வித்யாசம். மு.க.ஸ்டாலின் தலைவனாக இருந்து கட்சிக்காரர்களையும், மக்களையும் பார்க்கிறார். நான் தொண்டர்களில் ஒருவனாக இருந்து மக்களை நேசித்து பணியாற்றுகிறேன்." என்று பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்