கன்னியாகுமரி மாவட்டத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக உடற்கல்வி ஆசிரியர் மீது குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையை சேர்ந்தவர் சுந்தர் சிங். இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். சுந்தர் சிங் கன்னியாகுமரி அருகேயுள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இதன் காரணமாக பள்ளிக்கு அருகிலேயே வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார். இதனிடையே சுந்தர் சிங் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் இதுதொடர்பாக கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் சுந்தர் சிங்கை கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் சுந்தர் சிங்கின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அதில் பல பெண்களின் ஆபாச படங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து போலீசார் சுந்தர் சிங்கிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கைது செய்யப்பட்டுள்ள சுந்தர் சிங் மாணவிகள் மட்டுமல்லாமல் பல இளம்பெண்களிடம் பழகி வந்தார். அவர்களிடம் வீடியோ காலில் பேசுவதையும் வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அப்போது அவர்களிடம் பேசி ஆபாசமாக நிற்க வைத்து வீடியோ பதிவு செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. மேலும் பல மாணவிகள் மட்டுமல்லாது அவர்களது தாயாருடனும் தொடர்பு ஏற்படுத்தி பேசி வந்துள்ளார். வெளிநாட்டில் கணவர் இருக்கும் நிலையில் இங்கு தனியாக வசித்து வரும் பெண்களைதான் தனது இலக்காக வைத்திருந்துள்ளார்.
அதே சமயம் இதற்கு முன்னால் பல்வேறு பள்ளிகளில் பணியாற்றிய சுந்தர் சிங், அங்குள்ள சில பெண் ஆசிரியர்களுக்கும் வலை விரித்துள்ளார். இதுதொடர்பான அத்தனை தகவல்களையும் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது. இப்படியான நிலையில் சுந்தர் சிங் செல்போனை கைப்பற்றிய போலீசார் அதனை சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் வீடியோவில் உள்ள பெண்களை கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து புகார்கள் பெற்று நடவடிக்கை உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Atrocities On Dalits: ”ஏன் சேர்ந்து உட்காறீங்க" - பட்டியலின இளைஞரையும், இஸ்லாமிய பெண்ணையும் தாக்கிய கொடூர கும்பல்!