ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே பிடிக்கச்சென்ற போலீசின் கையை கடித்துவிட்டு தப்ப முயன்ற கஞ்சா ரவுடிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா பண்டல்களை பறிமுதல் செய்தனர். உச்சிப்புளி அருகே இருமேனி கடற்கரையில், ஒரு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உச்சிப்புளி சார்பு ஆய்வாளர் நாகநாதன் தலைமையில் இரண்டு காவலர்கள் உட்பட மூன்று போலீசார் தேடிச்சென்றனர். இவர்கள் தேடிச்சென்ற குற்றவாளிகளான மரவெட்டிவலசை பிரஷாத், காளிதாஸ்,ரஞ்சித் மற்றும் காளிதாஸின் தாய் சந்திரா உள்ளிட்ட நான்கு பேரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
இவர்கள் வருவதை கண்டு தப்பியோட முயன்ற அவர்களை, பிடிக்கச்சென்ற போலீசார் ரமேஷ், ஜெகதீஸ்ரன் ஆகியோரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றனர். ஆனால், போலீசார் அவர்களை விடவில்லை. அவர்களை துரத்தி விரட்டி பிடித்ததும் போலீசுக்கு கொஞ்சங்கூட அஞ்சாத அவர்கள் போலீசாருடன் மல்லுக்கட்டி தப்பிக்கப்பார்த்தனர். ஆனால் போலீசாரின் பிடி இறுகியது. இதனால், அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க இரண்டு போலீசாரின் கைகளையும் தனது பற்களால் பலமாக கடித்துள்ளனர். இதில் வலி தாங்க முடியாமல் போலீசாரில் ஒருவர் அலறித்துடித்துள்ளார். வலியில் துடித்தாலும் கூட குற்றவாளிகளை விடவில்லை. நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக நான்கு பேரில் இரண்டு பேரை பிடித்துவிட்டனர்.
காளிதாஸின் தாய் சந்திராவும், ஆக்கிடாவலசை ரஞ்சித் ஆகிய இருவரும் தப்பித்த நிலையில், அப்பகுதியில் அவர்கள் வைத்திருந்த அட்டை பெட்டியை கைப்பற்றினர். பெட்டியை பிரித்து பார்த்தபோது அதில் 5 பண்டல்களில் தலா நாலே கால் கிலோ வீதம் 21 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து பிரஷாத் (23), காளிதாஸ் (20) ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைப்பற்றிய கஞ்சா பண்டல்கள் மீதான வழக்கை பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீசார், இவர்களுக்கு எங்கிருந்து கஞ்சா மொத்தமாக கிடைக்கிறது இலங்கைக்கு கஞ்சா கடத்தும் கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தற்போது கைதான இருவர் மீதும் வழிப்பறி, திருட்டு, கஞ்சா வழக்குகள் உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இருவரையும் குண்டாசில் அடைக்க வாய்ப்புள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த போலீசார் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!