தஞ்சை அருகே மருங்குளத்தில் அடகு கடை சுவற்றில் ஓட்டையை போட்டு ஆட்டையை போடலாம் என்று நினைத்தவர்களுக்கு ஆப்பு வைத்தது அலாரம். இதனால் மக்கள் துரத்த, ஓட்டம் பிடித்துள்ளனர் மர்மநபர்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கொல்லாங்கரை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தஞ்சை அருகே மருங்குளம் நால்ரோடு பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். பத்தாண்டுகளுக்கும் மேலாக இவரது கடை இங்கு செயல்பட்டு வருகிறது. இவரது அடகுகடையில் மருங்குளம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் நகைகளை அடகு வைத்து மீட்பது வழக்கமான ஒன்று. இந்த அடகுக்கடைக்கு அடுத்த கடையில் செந்தில் குமார் என்பவர் மெடிக்கல் ஷாப் வைத்துள்ளார். இருவரது கடைகளும் ஒரே வளாகத்தில் அடுத்தடுத்து அமைந்துள்ளன.


 





வழக்கம் போல் நேற்று இரவு ரவிச்சந்திரனும், செந்தில்குமாரும் தங்களின் கடைகளை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்படனர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஐந்துக்கும் அதிகமான மர்மநபர்கள் மெடிக்கல் ஷாப் கதவின் பூட்டை உடைத்து அதன் உள்ளே புகுந்துள்ளனர். அவர்களின் இலக்கு மெடிக்கல் ஷாப் அல்ல. பக்கத்தில் உள்ள அடகு கடைதான். பின்னர் மெடிக்கல் ஷாப் வழியாக அடகு கடைக்கு சுவற்றில் உளியை வைத்து அதிகம் சத்தம் வராமல் ஒரு ஆள் உள்ளே புகுந்து வெளியேறும் வகையில் ஓட்டை போட்டுள்ளனர்.


மெடிக்கல் ஷாப்பில் இருந்து அந்த ஓட்டை வழியாக மர்மநபர்கள் அடகு கடைக்கு உள்ளே புகுந்து ஆஹா அள்ளிடலாம் என்று ஆசையோடு அங்கிருந்த இரும்பு லாக்கரை திறக்க முயற்சி செய்ய ஆப்பு வைத்தது அலாரம். உய்ங்ங்ங்ன்னு கத்தி ஊரை கூட்டியது அலாரத்தின் சத்தம். அவ்வளவுதான் சிக்கினால் செம மாத்துதான் என்று வந்த ஓட்டைக்குள்ளேயே அவசரம், அவசரமாக புகுந்த மெடிக்கல் ஷாப்பிற்குள் வந்துள்ளனர் மர்ம நபர்கள். கிடைத்த வரை லாபம் என்று மெடிக்கல் ஷாப் கல்லாப்பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் ஒரு லேப்டாப்பை தூக்கிய மர்ம கும்பல் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்தது.


 





இதற்குள் அலாரம் அடித்துக் கொண்டே இருந்ததால் பரபரப்பாக திரண்ட பொதுமக்கள் கடை நோக்கி வர சாப்பாட்டு மூட்டைக்குள் ஒளிந்திருந்த எலி போல மர்ம நபர்கள் மெடிக்கல் ஷாப்பில் இருந்து தாண்டிக்குதித்து ஓட ஆரம்பித்துள்ளனர். டேய் யார்றா அது என்று பொதுமக்கள் கத்திக் கொண்டே பின்னால் துரத்த மாட்டினால் மாத்துதான் என்று மர்ம கும்பல் வேக வேகமாக ஓட தொடங்கி உள்ளது. இடையில் சாலையின் ஓரத்தில் இருந்த கற்களை எடுத்து துரத்தும் பொதுமக்களை நோக்கி வீசியது. மேலும் கையில் இருந்த லேப்டாப்பையும் வீசிவிட்டு தப்பியது அந்த மர்ம கும்பல்.

இதில் துரத்தி சென்றவர்களில் ஸ்ரீராம் என்பவருக்கு கல் ஒன்று தாக்கவே அவர் காயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வல்லம் போலீசார் விரைந்து வந்தனர். தொடர்ந்து வல்லம் டிஎஸ்பி., பிருந்தா, இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் மெடிக்கல் ஷாப் மற்றும் அடகு கடை ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அலாரம் அடித்ததால் அடகுக்கடையில் இருந்த பல லட்சம் மதிப்பு நகைகள் தப்பி உள்ளது. இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.