பட்டுக்கோட்டை அருகே மனைவியை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ராஜா, சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு வெளியிட்டுள்ள புதிய வீடியோ பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தொடக்கத்தில் மனைவி அக்ஷயாவுக்கும் திருச்சியைச் சேர்ந்த ஜோஸ் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய ராஜா, தற்போது தனது பேச்சை மாற்றி உருக்கமான விளக்கத்தை அளித்துள்ளார்.

Continues below advertisement

பட்டுக்கோட்டை ராஜா அக்‌ஷயா வழக்கு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வட்டாத்திக்கோட்டையைச் சேர்ந்த ராஜா என்ற தர்மராஜா, தனது மனைவி அக்ஷயாவை வீட்டில் கத்தியால் சரமாரியாக தாக்கியதாக கைது செய்யப்பட்டார்தாக்குதலுக்குப் பிறகு 4 வயது மகனுடன் அவர் வெளியிட்ட வீடியோவில், தனது மனைவி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தானும் தனது மகனும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும்  கண்ணீருடன் பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகவே  சில மணி நேரங்களிலேயே போலீசார் ராஜாவை கைது செய்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அக்ஷயாவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அக்‌ஷயா வாக்குமூலம் 

சிகிச்சை பெற்று வந்த அக்ஷயா பின்னர் அளித்த வாக்குமூலத்தில், தன்னைப் பற்றி பரவிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ஜோஸ் தனது நண்பர் மட்டுமே என்றும், கணவரின் தொடர் சந்தேகமே குடும்பத்தில் பிரச்சினையை உருவாக்கியதாகவும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகின. தனது தரப்பை முழுமையாக கேட்காமல் ஆத்திரத்தில் ராஜா இத்தகைய முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Continues below advertisement

சிறையில் இருந்து திருபிய ராஜா வெளியிட்ட வீடியோ

இந்த நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த ராஜா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் முற்றிலும் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார். அதில், "நான் கோபத்தில் செய்தது மிகப்பெரிய தவறு. என் மனைவி மீது எந்தத் தவறும் இல்லை. நான் சந்தேகப்பட்ட விதமும், எடுத்த முடிவும் தவறானது. ஜோஸ் மீதும் தேவையில்லாமல் பழி சுமத்திவிட்டேன். அவர் மீதும் எந்தத் தவறும் இல்லை. என் கோபத்தால் என் வாழ்க்கையையும், என் குடும்பத்தையும் நானே அழித்துக்கொண்டேன்" என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

மேலும், யாரும் தங்கள் வாழ்க்கையில் சந்தேகத்தையும் கோபத்தையும் வளர்க்கக் கூடாது என்றும், ஒரு நிமிட ஆத்திரம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத துயரத்தை ஏற்படுத்திவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தற்போது தனது மகனின் எதிர்காலமே தனக்கு மிகப்பெரிய கவலையாக இருப்பதாகவும், நடந்த தவறை திருத்த முடியாவிட்டாலும், உண்மையை அனைவரிடமும் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த வீடியோவை வெளியிட்டதாகவும் ராஜா தெரிவித்துள்ளார்.

ராஜாவின் இந்த புதிய வீடியோ வெளியாகியுள்ள நிலையில், பட்டுக்கோட்டை தாக்குதல் வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு தொடர்பான சட்டநடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் குடும்ப உறவில் சந்தேகமும் ஆத்திரமும் ஏற்படுத்தும் மோசமான விளைவுகளுக்கான மற்றொரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.