மதுரை உசிலம்பட்டி அடுத்த பெரிய கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ”கௌசல்யா - முத்துப்பாண்டி” தம்பதியர். இத்தம்பதிகளுக்கு ஏற்கனவே நான்கு மற்றும் இரண்டு வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி சேடப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தாக பிறந்துள்ளது. இந்நிலையில் பிறந்த இந்த பெண் குழந்தை உடல்நல குறைவு காரணமாகக் கூறி கடந்த 26-ஆம் தேதி காலையில் உயிரிழந்தாக யாருக்கும் தெரியப்படுத்தாமல் மறைமுகமாக வீட்டின் அருகிலேயே பெற்றோர் புதைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வந்த கிராம செவிலியரிடம் முன்னுக்கு பின் முரணான பதில்களை பெற்றோர் தெரிவிக்கவே சந்தேகமடைந்த கிராம செவிலியர் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர்களிடம் தகவல் அளித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டி விசாரிக்கும் போதும் முறையான பதில் இல்லாததால் இந்த சம்பவம் தொடர்பாக சேடபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் முத்துப்பாண்டி - கௌசல்யா வீட்டிற்கு சென்ற போது பெற்றோர்கள் தலைமறைவானது தெரிய வந்துள்ளது. மேலும் பெற்றோர்கள் தலைமறைவாக இருப்பதால் பெண்சிசு கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் பெற்றோர்களை தேடி வருகின்றனர். உசிலம்பட்டி பகுதியில் மீண்டும் பெண்சிசு கொலை அரங்கேறி இருக்குமோ என்ற அச்சம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மதுரை மாவட்ட காவல் கூடுதல் காவல் துணைக் காணிப்பாளர் சந்திரமௌலி தலைமையிலான போலீசார் , வட்டாச்சியர் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் முணியாண்டி மற்றும் சமூக நலத்துறையின் சமூக நல விரிவாக்க அலுவலர் ஜெயா தலைமையிலான அலுவலர்கள் முன்னிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர் நடராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பெண்சிசு புதைக்கப்பட்ட இடத்தில் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்தனர். இந்த சூழலில் கோடாங்கிநாயக்கன்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த பெற்றோர்களான முத்துப்பாண்டி - கௌசல்யா தம்பதியை சேடபட்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து காவல்துறையினர் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...," அரசு இராசாசி மருத்துவமனை தடய அறிவியல் மருத்துவத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மேற்படி சிசுவின் பிரேதத்தை தோண்டி எடுத்து பிணக் கூராய்வு செய்ததில் சிசுவின் தலையின் மீது ஏற்பட்ட காயத்தினால் சிசு இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து மேற்படி சிசுவின் பெற்றோர்களான முத்துப்பாண்டி மற்றும் கௌசல்யா ஆகியோரை சேடபட்டி காவல்துறையினர் விசாரணை செய்ததில் சிசுவின் தாயாரான கௌசல்யா என்பவர் தனக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அக்குழந்தையை தங்களால் சரியாக வளர்க்க முடியாத காரணத்தினால் மேற்படி பெண் குழந்தையின் தலையை சுவற்றில் மோத வைத்து கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து மேற்படி சிசுவின் பெற்றோர்களான முத்துப்பாண்டி மற்றும் கௌசல்யா அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் இதுபோன்று பெண்சிசுக் கொலை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெண் சிசுக்கொலை வளர்க்க முடியாத பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை அரசு காப்பகத்தில் வைத்து வளர்த்துக் கொள்ளலாம். பெண் சிசு வதை என்பது ஒரு கொடூர செயல் என்றும் பெண் சிசுவை பாதுகாப்பது நம் கடமை என்றும் இதுபோன்று இனி ஒரு பெண் சிசுக்கொலை மதுரை மாவட்டத்தில் நிகழ வேண்டாம் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்கள். மேலும் இதுபோன்று வளர்க்க முடியாத நிலையில் யாரேனும் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Taste | பர்மா இடியாப்பம்.. அவித்த காய்கறி குருமா.. இறைச்சி க்ரேவி.. மதுரையில் இப்படி ஒரு Foodie சொர்க்கம்