பண்ருட்டியில் வீடு புகுந்து திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 5 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. 

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள நடுசாத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ், அவரது மனைவி  ஹெலான் மேரி (33) ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆரோக்கிராஜ், ஹெலன் மேரி இருவரும் வீட்டில் இல்லாத நேரத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பட்டப்பகலில் வீடு புகுந்து பீரோவில் இருந்த 20 பவுன் நகையில் 5 பவுன் தங்க நகைகளை மட்டும் திருடிக் கொண்டு மர்ம நபர் ஒருவர் திருடி சென்ற நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்திய நிலையில் அங்கிருந்த சிசிடிவிலும் பதிவாகி இருந்தது. 

 

இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து நகை திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர். 

 

கடலூர் அடுத்த விலங்கல்பட்டு கிராமத்தை சேர்ந்த வாலிபர் படையப்பா என்கிற ராஜகுமாரன்(23) என்பவரை கைது செய்து  அவரிடமிருந்து 5 பவுன் தங்க நகை மீட்டனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட வாலிபரிடம் போலீசார் நடத்திய  விசாரணையில், திருடச் செல்லும் வீட்டில் எத்தனை பவுன் இருந்தாலும் பாதியை மட்டும் திருடிச் செல்லும் பழக்கம் இருப்பதையும் போலீசார் கண்டறிந்தவர். இவர் மீது ஏற்கனவே இரண்டு திருட்டு வழக்குகள் மற்றும் போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.