திருமணம் செய்து மனைவியை கொடுமை செய்த செய்திகளை தான் நாம் கேட்டிருபோம். ஆனால் இந்தச் செய்தி லிவ் இன் பார்ட்னரை தினம் தினம் வதை செய்த இளைஞரைப் பற்றியது.


கேரள மாநிலம் பாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரயில் ஹரிகிருஷ்ணன். இவருக்கு 24 வயதாகிறது. இவர் ட்ரெட்ஜ் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவர் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் மீது காதல் கொண்டார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி அவர் தனது கணவரைப் பிரிந்திருந்தார். இருந்தாலும் பரவாயில்லை எனக் கூறி அந்தப் பெண்ணிடம் தனது காதலைச் சொல்லியுள்ளார் ஹரிகிருஷ்ணன். நீண்ட கால தயக்கத்திற்குப் பின்னர் ஹரிகிருஷ்ணன் தன் மீது காட்டிய ஆர்வத்தால் அந்தப் பெண்ணும் அவருக்கு சம்மதம் சொல்லியுள்ளார். இருவரும் காதலர்களாக மாறியவுடன் ஹரிகிருஷ்ணன் திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்துள்ளார். இதனை அந்தப் பெண்ணும் நம்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் அந்தப் பெண்ணும், ஹரிகிருஷ்ணனும் கணவன், மனைவியாகவே வாழ்ந்து வந்துள்ளனர். டிசம்பர் 2021ல் அந்தப் பெண் கர்ப்பமானார்.


அப்போதிலிருந்து ஹரி கிருஷ்ணனின் நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிந்துள்ளது. அவரிடம் பலமுறை கேட்டும் சரியாக அவர் பதில் சொல்லவில்லை. ஆனால், தன்னை விடுத்து நர்சிங் மாணவி ஒருவரை ஹரிகிருஷ்ணன் காதலித்து வந்ததை அந்தப் பெண் தெரிந்து கொண்டார். உடனே ஹரிகிருஷ்ணனிடம் சண்டையிட்டுள்ளார். அப்போது ஹரிகிருஷ்ணன் ஆம் உண்மைதான் நான் அந்தப் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று பகிரங்கமாகவே சொல்லியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அதன் பின்னர் ஹரிகிருஷ்ணன் அப்பெண்ணை அடித்துத் துன்புறுத்த ஆரம்பித்துள்ளார். அவரின் கொடுமைகள் பொறுக்க முடியாமல் மாநில மகளிர் ஆணையத்தில் அப்பெண் புகார் கொடுத்தார். வீட்டில் தங்க பயந்து கொண்டு வண்டன்பாதல் மடத்தில் குழந்தையுடன் தஞ்சம் புகுந்தார்.




இதை அறிந்து கொண்ட ஹரிகிருஷ்ணன் அங்கு சென்று அப்பெண்ணிடம் நயந்து பேசி. குழந்தையைக் கொஞ்சி, அவருக்கு நம்பிக்கை விதைத்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், அந்தப் பெண்ணை ஓரிரு நாட்களிலேயே மீண்டும் கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளார் ஹரிகிருஷ்ணன். இந்த முறை அப்பெண் மாவட்ட துணை எஸ்.பி. ஷாஜு ஜோஸிடம் புகார் கொடுத்தார். அவருக்கு சம்மன் அனுப்பப்பட அவரோ காவல்நிலையத்திற்கு வரவே இல்லை.


உடனே காவல்துறை அப்பெண்ணையும் குழந்தையையும் மஹிளா மந்திரத்தில் தங்க வைத்தனர். இதனைத் தெரிந்து கொண்ட ஹரி கிருஷ்ணன் அப்பெண்ணுக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பி திருமணம் செய்து கொள்கிறேன். மார்ச் 3 ஆம் தேதி நேரில் வரவும் என்று குறிப்பிட்டுள்ளார். இதை நம்பி அப்பெண் கொழுவனல் சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றார். ஆனால் ஹரி கிருஷ்ணன் வழக்கம்போல் எஸ்கேப் ஆனார்.


அவர் மீண்டும் போலீஸில் புகார் கொடுக்க போலீஸார் ஹரிகிருஷ்ணனை கைது செய்துள்ளனர். 2021 டிசம்பர் தொடங்கி மூன்று மாதங்களில் ஹரிகிருஷ்ணன் அப்பெண்ணை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மிக மோசமாக கொடுமை செய்துள்ளார்.