பாகிஸ்தானில் தினமும் குறைந்தது 11 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் (2015-2021) 22,000-க்கும் அதிகமான சம்பவங்கள் நடந்துள்ளன என்று பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 


ஆனால் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கானோ கடந்த ஆண்டு தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், பெண்களின் ஆடைக் குறைப்பே பாலியல் வன்முறைகளுக்குக் காரணம். பெண்கள் குறைவாக ஆடை அணிந்தால், அது ஆண்களை பாதிக்கும். அவர்கள் இயந்திரம் அல்ல. இது ஒரு பொதுவான அறிவு. கடந்த 6 ஆண்டுகளில் பாகிஸ்தானில் 22,000 பாலியல் பலாத்காரங்கள் நடந்துள்ளன. இதுவரை இந்தக் குற்றங்களின் தண்டனை விகிதம் 0.03 சதவீதம் மட்டுமே, இதுவரையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 77 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்நாட்டின் பிரதமர் பொறுப்பற்ற விதத்தில் பதில் சொல்லியிருந்தார்.


பிரதமரின் கருத்தே இப்படி இருக்கும்போது அநீதிகள் தொடரத்தானே செய்யும் எனக் குமுறுகின்றனர் அந்நாட்டு இளம்பெண்கள். அண்மையில் கிரிக்கெட் விளையாட்டை குடும்பத்துடன் காணச் சென்ற இளம் பெண்ணுக்கு நாந்த பாலியல் சீண்டல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



பிஎஸ்எல் தொடர்..


இந்தியாவில் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) நடைபெற்றுவருவது போல, பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) என்ர பெயரில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பிஎஸ்எல் தொடரின் 7-வது சீசன் நடந்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன், லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்துக்கு கிரிக்கெட் பார்க்கச் சென்றுள்ளார். போட்டியைப் பார்த்துவிட்டு வீடுதிரும்ப மைதானத்திலிருந்து கிளம்பும் நேரத்தில் கூட்டத்தில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் எங்குச் சென்றார்கள் என்பது தெரியவில்லை. பதறிப்போன இளம்பெண் அங்குமிங்கும் பெற்றோர், குடும்பத்தினரைத் தேடியுள்ளார்.


ஓரிடத்தில் இரண்டு அரங்க ஊழியர்கள் நின்றிருந்தனர். அவர்களிடம் மைதானத்திலிருந்து வெளியே செல்ல வழி கேட்டுள்ளார். அந்த இருவரும் நாங்கள் வழி காட்டுகிறோம் எனக் கூறி அந்தப் பெண்ணை ஆள் அரவமற்றப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அந்தப் பெண் அச்சத்தில் கூச்சலிட ஆரம்பித்தார். அந்த இருவரும் பெண்ணிடம் பாலியல் சீண்டல்களைத் தொடங்கினார். பயத்தில் அப்பெண் மேலும் மேலும் கூச்சலிட்டார். வெளியில் பெண்ணைத் தேடிக் கொண்டிருந்த பெற்றோருக்கு அப்பெண்ணின் அபயக் குரல் கேட்டது. உடனே ஓசை வந்த பக்கம் ஓடிச் சென்று மகளை மீட்டனர்.


ஆட்கள் வருவதைத் தெரிந்துகொண்ட பாதுகாவலர்கள் இருவரும் அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பித்து ஓடிவிட்டார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.