புதுச்சேரியில் பகுதி நேர டைப்பிங் வேலை என கூறி ஆன்லைன் 4,68,127 ரூபாய் மோசடி, வேலை ஆசை காட்டி பணத்தை பறித்த கும்பலை சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.
பகுதி நேர டைப்பிங் வேலை என கூறி பணம் மோசடி
புதுச்சேரியைச் சேர்ந்த மகேஷ் குமார், தனியார் நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் பகுதி நேர டைப்பிங் வேலை இருக்கிறது என நம்பி, அந்த நிறுவனத்திற்கு பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார். பின்னர், வேலை செய்வதற்கான லிங்க் அனுப்பி அவரை பணியை முடிக்கச் செய்தனர். ஆனால், குறிப்பிட்ட காலத்தில் வேலை முடிக்கவில்லை என மிரட்டி 4,68,127 ரூபாய் பணம் பறிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த மகேஷ் குமார் புகார் அளித்ததை தொடர்ந்து, புதுச்சேரி இணையவழி காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. தீவிர கண்காணிப்பில், கும்பலின் முக்கிய உறுப்பினர்கள் குஜராத்தில் சிவப்பா லக்ஷ்மண் பானே, மும்பையில் உதயபான் நான போபடே ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மோசடி கும்பலை மடக்கி பிடித்த போலீஸ்
மோசடி கும்பலைப் பற்றிய மேலதிக தகவல்கள் கிடைத்ததால், கண்குசரண் சிபரம் பணிகராகி, அபிஷேக் @ ஜகத் நாயக் ஆகியோர் துபாய் பயணம் மேற்கொண்டது தெரிய வந்தது. அவர்கள் வெளிநாடு தப்பி செல்லாமல் இருப்பதற்காக LOC (look out circular) மூலம் மத்திய குடியேற்ற துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் 24ம் தேதி மும்பை விமான நிலையத்தில் இந்திய குடியேற்ற துறை அதிகாரிகளால் பிடித்து, புதுச்சேரி கொண்டு வந்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
206 கோடி ரூபாய் மோசடி
இந்த ஆன்லைன் மோசடி வழக்கில் 206 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 7 நபர்களும் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். புதுச்சேரியில் 4.50 லட்சம் ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது. இந்தக் கும்பலின் ஒரு வங்கி கணக்கில் 5 நாட்களில் 1 கோடியே 50 லட்சம் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதை பற்றி, நித்யா ராதாகிருஷ்ணன், இணையவழி முதுநிலை காவல் கண்காணிப்பாளர், கூறுகையில், இணைய வழி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வேலை வாய்ப்பு, டிஜிட்டல் அரஸ்ட், வீட்டில் இருந்தே வேலை, பங்குச் சந்தையில் முதலீடு போன்ற எதையும் நம்பி பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
சைபர்கிரைம் புகார்
இதுகுறித்து சைபர்கிரைம் போலீசார் கூறுகையில், சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களின் உண்மை தன்மையை அறியாமல் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். சைபர் குற்றம் சம்பந்தமாக 1930, 0413-2276144, 9489205246 எண்களில் புகார் அளிக்கலாம் என்றனர்.
விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.
அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர்.
தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.
வங்கி OTP எண் சொல்லாதீங்க
மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது.
இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.