புதுச்சேரி: ஆன்லைனில் பகுதி நேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என புதுச்சேரியில் 8 பேர் மோசடி கும்பலிடம் ரூ.1.92 லட்சம் இழந்துள்ளனர்.
பகுதி நேர வேலை என கூறி மோசடி
புதுச்சேரி சாரம் பகுதி சேர்ந்தவரை, வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் பகுதி நேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார். இதைநம்பி, மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 500 முதலீடு செய்துள்ளார். அதன் மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை.
இதேபோல், தவளக்குப்பத்தை சேர்ந்த பெண் 20 ஆயிரம், சாரத்தை சேர்ந்த பெண் 16 ஆயிரத்து 330, நைனார்மண்டபத்தை சேர்ந்தவர் 8 ஆயிரத்து 750, பாகூரைச் சேர்ந்தவர் 5 ஆயிரம், காலாப்பட்டை சேர்ந்தவர் 18 ஆயிரத்து 745, புதுக்குப்பத்தை சேர்ந்த பெண் 10 ஆயிரம், உருளையன்பேட்டையை சேர்ந்தவர் 3 ஆயிரத்து 500 எ ன, 8 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 1 லட்சத்து 92 ஆயிரத்து 825 இழந்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
போலீசாரின் எச்சரிக்கை மற்றும் அறிவுரை
புதுச்சேரி இணைய வழி போலீசார், “இணையத்தில் ஏதேனும் பொருளை வாங்கும் முன்பும் அதன் உண்மைத்தன்மையை நன்கு ஆராய்ந்து, விற்பவரின் முழுமையான விபரங்களையும் சரிபார்த்து பார்த்த பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சமூக ஊடகங்களில் தோன்றும் கவர்ச்சியான விளம்பரங்களை உடனடியாக நம்பி பணம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மோசடிக்கு ஆளானவர்கள் உடனடியாக புகார் அளித்தால், குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணி எளிதாகும் என்பதால், எந்த குற்றச்சம்பவத்தையும் மறைக்காமல் உடனடியாக தகவல் தருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எங்கே, எப்படி புகார் அளிப்பது?
இணைய குற்றச்செயல்களுக்கு உள்ளானால் அல்லது சந்தேகத்துக்கிடமான எந்த தகவலையாவது காணும்போது, பொதுமக்கள் பின்வரும் வழிகளைப் பயன்படுத்தி புகார் அளிக்கலாம்:
- தேசிய அளவிலான இலவச உதவி எண்: 1930
- புதுச்சேரி சைபர் செல் எண்கள்: 0413-2276144 / 9489205246
- மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in
- இணைய தளம்: www.cybercrime.gov.in
விழிப்புணர்வே பாதுகாப்பு
ஆன்லைன் உலகில் அதிகரித்து வரும் போலி விளம்பரங்கள் மற்றும் மோசடிகளைத் தடுக்க காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், பொதுமக்கள் தங்களுக்குள் விழிப்புணர்வை வளர்த்துக்கொள்வது தான் மிகச் சிறந்த பாதுகாப்பு. குறிப்பாக பண்டிகை நாட்களில் வரும் சலுகை விளம்பரங்களைப் பார்த்து உடனடியாக நம்பாமல் சற்று ஆராய்ச்சி செய்தால், பெரும் இழப்புகளை தவிர்க்கலாம்.