தென்காசி மாவட்டம் அருகே இரு தனியார் பேருந்துகள் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள இடைகால் அருகே இந்த விபத்தானது நடைபெற்றுள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 5 பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் உயிரிழந்தனர். சம்பவம் பற்றி கேள்விப்பட்ட உடனே அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்து நடந்தது எப்படி?
இந்த விபத்தில் சிக்கிய எம்.ஆர்.கோபாலன் பேருந்து கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தது. மற்றொரு பேருந்தான கே.எஸ்.ஆர் ராஜபாளையத்தில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. இதில் கே.எஸ்.ஆர். பேருந்து தடம் மாறி கோபாலன் பேருந்து மீது மோதியதாக சொல்லப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடைபெற்றுள்ளதால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியுள்ள இரு பேருந்துகளையும் பிரித்தெடுக்கும் பணியானது நடைபெற்று போக்குவரத்தை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதால் முன்பக்கம் அப்பளம் போல உடைந்தது. மேலும் இந்த இரண்டு பேருந்துகளும் வேகமாக இயக்கப்பட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே வேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டதா?, கேஎஸ்ஆர் பேருந்து தடம் மாறி சென்றதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசியல் தலைவர்கள் இரங்கல்
இதனிடையே தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அச்சம்பட்டியில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் உடனே ஏற்படுத்தி தரவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தென்காசி விபத்து தொடர்பாக தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்கு உள்ளாகியிருக்கிறேன். உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களைத் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளேன்.
விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட ஆட்சியரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும்” என தெரிவித்துள்ளார்.