கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்த சகோதரர்களான கிருஷ்ண நாயக்கர், பொம்மு நாயக்கர் குடும்பங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நில பிரச்சனையை பல இடங்களில் பேசித் தீர்க்க நினைத்தும் அடிக்கடி வாய்த்தகாராறு முற்றியதால் இருத்தரப்பில் இருந்தும் எந்த முடிவுகளும் எட்டப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ண நாயக்கரின் குடும்பத்தினருக்கும், அவரது சகோதரரான பொம்மு நாயக்கரின் குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் நடந்த பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறி கைகலப்பானது. இரு தரப்பில் இருந்தும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
கிருஷ்ணநாயக்கர், பொம்முநாயக்கர் இடையேயான இந்த நிலப்பிரச்னையை தீர்த்து இரு சகோதரர்களுக்கும் இடையே சமாதானம் செய்ய வந்த கிருஷ்ண நாயக்கரின் அக்காள் கணவரான 75 வயது முதியவர் காமாநாயக்கர் இந்த சண்டையை தடுக்க முற்பட்டபோது, பொம்மு நாயக்கரின் குடும்பத்தினர் காமாநாயக்கரின் தலையில் தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே எதிர்பாராதவிதமாக பரிதாபமாக உயிரிழந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மேலும் பொம்மு நாயக்கரின் குடும்பத்தினர் நடத்திய தாக்குதலில் கிருஷ்ண நாயக்கர் மற்றும் அவரது மகன் சின்னச்சாமி உள்ளிட்ட மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவருக்கு மட்டும் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நிலத்தகராறில் இரு குடும்பங்கள் மோதிக்கொண்டு ஒருவர் உயிரிழந்தது தொடர்பாகஅப்பகுதி பொது மக்கள் தோகைமலை காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தோகமலை போலீசார் அடிதடி தகராறில் உயிரிழந்த காமாநாயக்கன் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
75 வயது முதியவர் காமாநாயக்கரின் உயிரிழப்புக்கு காரணமான பொம்மு நாயக்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெருமாள், குமார், செல்லப்பாண்டி, முத்துசுவாமி, பாலசுப்பிரமணி, வேல்முருகன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தோகைமலை போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். கரூர் அருகே நிலத்தகராறில் பிரச்சனையை தடுக்க வந்த முதியவர் காமாநாயக்கன் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காமாநாயக்கரின் கொலைக்கு காரணமான பொம்மு நாயக்கரின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ண நாயக்கரின் குடும்பத்தினர் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.